செய்திகள் (Tamil News)
கோப்புபடம்

2009-ம் ஆண்டு நடைபெற்ற போலீஸ் தடியடியை கண்டித்து வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம்

Published On 2021-02-19 09:27 GMT   |   Update On 2021-02-19 09:27 GMT
சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற போலீஸ் தடியடியை கண்டித்து வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை:

சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ந்தேதி போலீசார் வக்கீல்களை கண்மூடித்தனமாக தாக்கினர்.

இதில் 5 நீதிபதிகள் உள்பட ஏராளமான வக்கீல்கள், பொதுமக்கள் படுகாயம் அடைந்தனர். நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன.

இதை கண்டித்து ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 19-ந்தேதியன்று கறுப்பு தினமாக அறிவித்து அன்றைய தினம் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

12-வது ஆண்டாக இன்றும் நீதிமன்ற புறக்கணிப்பில் வக்கீல்கள் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஐகோர்ட்டில் அகில இந்திய வழக்கறிஞர் கூட் டமைப்பு தலைவர் டாக்டர் டி.கே.சத்தியசீலன் தலைமையில் ஏராளமான வக்கீல்கள் கறுப்பு சட்டை அணிந்து கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். சென்னை ஐகோர்ட்டு வழக்கறிஞர் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன், துணைத்தலைவர் சுதா, செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் ஏராளமான வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஐகோர்ட்டு மட்டுமின்றி சென்னை எழும்பூர், ஜார்ஜ் டவுன், சைதாப்பேட்டை கோர்ட்டிலும் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள கோர்ட்டுகளிலும் வக்கீல்கள் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

Similar News