செய்திகள்
கோப்புப்படம்

ஈரோடு மாவட்டத்தில் ரூ.8.55 கோடிக்கு மது விற்பனை

Published On 2021-11-05 03:46 GMT   |   Update On 2021-11-05 03:46 GMT
தீபாவளியையொட்டி நேற்று ஒரே நாளில் ஈரோடு மாவட்டம் முழுவதும் ரூ.8 கோடியே 55 லட்சத்துக்கு மது விற்பனையாகி உள்ளதாக மாவட்ட டாஸ்மாக் பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:

தீபாவளி பண்டிகை நேற்று ஆரவாரமாக கொண்டாடப்பட்டது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் பட்டாசு வெடித்து, புத்தாடை அணிந்து மகிழ்ந்தனர்.

பொதுவாக பண்டிகை என்றாலே குடிமகன்கள் தங்களுக்கு பிடித்த மது வகைகளை வாங்கி குடித்து மகிழ்வார்கள். இதனால் பண்டிகைக்கு முதல் நாள் இரவு மது விற்பனை அமோகமாக நடைபெறும்.

தீபாவளி, புது வருடம், பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைக்கு முதல் நாள் இரவு குடிமகன்கள் மதுக்கடைகளில் குவிந்து தங்களுக்கு வேண்டிய மது வகைகளை அள்ளிக் கொண்டு செல்வார்கள். இதனால் பண்டிகை நாட்களில் மட்டும் பல கோடி மதிப்பில் மது விற்பனை அமோகமாக இருக்கும்.

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 212 மது கடைகள் உள்ளன. பார் வசதியுடன் 100 மதுக்கடைகள் உள்ளன. இந்த மதுக்கடைகளில் சாதாரண நாட்களில் மட்டும் ரூ.4 கோடி வரை மது விற்பனை நடைபெறும். ஆனால் அதேநேரம் பண்டிகை காலங்களில் கூடுதலாக மது விற்பனை நடைபெறும்.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் வழக்கம்போல் மது விற்பனை அமோகமாக நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை விற்பனை மந்தமாகவே இருந்தது. ஆனால் மாலை முதல் இரவு வரை விற்பனை களைகட்டியது. குடிமகன்கள் பிராந்தி, பீர், ஒயின் வகைகளை வாங்கிச் சென்றனர்.

தீபாவளியையொட்டி நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் ரூ.8 கோடியே 55 லட்சத்துக்கு மது விற்பனையாகி உள்ளதாக மாவட்ட டாஸ்மாக் பொது மேலாளர் தெரிவித்துள்ளார். மேலும் இது சாதாரண நாட்களை விட 2 மடங்கு அதிகமாக விற்பனை நடந்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News