2015-ம்ஆண்டு மழை வெள்ளத்துக்கு பின்னர் சென்னை மாநகராட்சி என்ன செய்தது? ஐகோர்ட்டு கடும் கண்டனம்
சென்னை:
சென்னையில் சாலை அகலப்படுத்துவது, நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்துக்கு பின், உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள பல கோடி ரூபாயில் திட்டங்கள் தீட்டப்பட்ட போதும், தற்போது சென்னை மாநகரமே மழை நீரில் மிதக்கிறது.
2015-ம் ஆண்டு வெள்ளத்துக்கு பின் சென்னை மாநகராட்சி என்ன செய்து கொண்டிருக்கிறது? ஒரு வாரத்தில் நிலைமையை சரி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றம் தாமாக முன் வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்கும் என எச்சரித்தனர்.
அதேபோல, அரியலூர் மாவட்டம் பெரியதிருக் கோணம் பகுதியில் உள்ள ஏரியில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பை அகற்ற கோரிய வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். நீர் வழிப் பாதைகளில் எந்த தடையும் இருக்க கூடாது.
வெள்ளம் வடியும் வகையில் நீழ்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பாதி நாட்கள் தண்ணீருக்காகவும், மீதி நாட்கள் தண்ணீரிலும் சென்னை மக்கள் வாழ்கின்றனர்.
இந்த மழை வெள்ளம் அதிகாரிகளுக்கு நல்ல பாடத்தைக் கற்றுக்கொடுத்துள்ளது.
இவ்வாறு நீதிபதிகள் கருத்து கூறினர்.
பின்னர், கோரிக்கை தொடர்பாக மீண்டும் மனு அளிக்க மனுதாரருக்கு அறிவுறுத்தியதுடன், அந்த மனு மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இதையும் படியுங்கள்... மகாபலிபுரம் முதல் எண்ணூர் வரை சென்னையில் கடல் சீற்றம்