செய்திகள் (Tamil News)
முன்னெச்சரிக்கை குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு

ராமநாதபுரம், ராமேசுவரம் பகுதியில் மழை - முன்னெச்சரிக்கை குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு

Published On 2021-11-10 09:14 GMT   |   Update On 2021-11-10 09:14 GMT
அமைச்சர் தங்கம் தென்னரசு, ராமேசுவரம் நடராஜபுரம், அண்ணா நகர் பகுதிகளில் மழைநீர் தேங்கும் இடங்களை பார்வையிட்டு தீயணைப்புத் துறையினரின் வெள்ள தடுப்பு உபகரணங்களையும் பார்வையிட்டார்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம், ராமேசுவரம் பகுதியில் அமைச்சர் மற்றும் மாவட்ட கணிப்பாய்வு அமைச்சர் தங்கம் தென்னரசு வடகிழக்கு பருவ மழையையொட்டி செய்ய வேண்டிய முன்னேற்பாடு மற்றும் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

அப்போது அமைச்சர் பேசுகையில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதல்-அமைச்சர் ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை தடுப்பு போல வெள்ள தடுப்புக்கான எல்லாவிதமான தடுப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ளவும் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் பாதுகாக்கவும் அறிவுறுத்தி உள்ளார்.

எந்தந்த இடங்களில் தண்ணீர் தேங்குகிறதோ அதையெல்லாம் ஆய்வு செய்து வருகிறோம். ராமநாதபுரம் நகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்காத வகையிலும் மற்ற நகராட்சி பகுதிகளிலும் மழைநீர் தேங்காத வகையில் மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தொடர்ந்து 2, 3 நாட்களுக்கு கனமழை ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நேரத்தில் பொது மக்களுக்கு எந்தவிதமான பிரச்சினை இல்லாத வகையிலும், கால்நடைகள் மற்றும் பொதுமக்களின் உடமைகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் இருப்பதற்காக தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்ட நிர்வாகம், காவல்துறை, மின்சார வாரியம் போன்ற அத்தியாவசிய துறைகள் அனைத்தும் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றார்.

முன்னதாக அமைச்சர் தங்கம் தென்னரசு, ராமேசுவரம் நடராஜபுரம், அண்ணா நகர் பகுதிகளில் மழைநீர் தேங்கும் இடங்களை பார்வையிட்டு தீயணைப்புத் துறையினரின் வெள்ள தடுப்பு உபகரணங்களையும் பார்வையிட்டார்.

மண்டபம் ஊராட்சி ஒன்றியம் தங்கச்சிமடம், ஊராட்சி அய்யன் தோப்பு பகுதியில் மழைநீர் தேங்கும் இடங்களையும் பார்வையிட்டார். பாம்பன் பாலம் மற்றும் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் சக்கரக்கோட்டை கண்மாய், ராமநாதபுரம் பெரிய கண்மாய் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலெக்டர் சங்கர்லால் குமாவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் காதர் பாட்சா முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்), முருகேசன் (பரமக்குடி), கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி பிரவீன் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News