தமிழ்நாடு

ஆம்னி பஸ்கள் தொடர்ந்து இயங்க எந்த தடையும் இல்லை- அமைச்சர் தகவல்

Published On 2024-06-22 07:30 GMT   |   Update On 2024-06-22 07:31 GMT
  • நாகலாந்து, அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பதிவு செய்து இங்கு இயங்கி வருகின்றன.
  • ஆம்னி பஸ்களும் தமிழ்நாட்டிற்கு எந்த வரியும் செலுத்துவதில்லை.

சென்னை:

போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் முழுவதிலும் 1,535 ஆம்னி பஸ்கள் தமிழ்நாட்டில் பதிவு செய்து முறையாக இயங்கி வருகின்றன. இவைதவிர 943 ஆம்னி பஸ்கள் பிற மாநிலங்களில் பதிவு செய்து அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று தமிழ்நாட்டிற்குள்ளாக அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு விதிகளை மீறி இயங்கி வருகின்றன.

இவற்றுள் பெரும் பான்மையானவை புதுச்சேரி, நாகலாந்து, அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பதிவு செய்து இங்கு இயங்கி வருகின்றன.

மேலும், கர்நாடகம், கேரளம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பதிவு செய்து அந்த மாநிலங்களுக்குச் செல்லாமல் தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு வரியும் செலுத்தா மல் தமிழ்நாட்டிற் குள்ளாகவே இயங்கி வருகின்றன. இதுவும் ஒரு விதி மீறலாகும்.

மேலும் இந்த மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பஸ்களில் பல தமிழ்நாடு மாநிலம் வழியே பிற மாநிலங்களுக்கு பயணிக்கின்றன. அவ்வாறு செல்லும் பொழுது விதிகளை மீறி தமிழ் நாட்டிற்குள் பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. இவ்வகை ஆம்னி பஸ்களும் தமிழ்நாட்டிற்கு எந்த வரியும் செலுத்துவதில்லை.

இதனை ஒழுங்குபடுத்துவதற்கு போக்குவரத்து ஆணையரகத்தின் சார்பில் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தி, அவர்களின் கோரிக்கைகளுக்கேற்ப மூன்று முறை கால அவகாச நீட்டிப்பு வழங்கியும், மொத்தம் உள்ள 905 இதர மாநிலப் பதிவெண் கொண்டு அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று விதிகளுக்குப் புறம்பாக தமிழ்நாட்டிற்குள் இயங்கும் ஆம்னி பஸ்களில் நாளது தேதி வரை 112 ஆம்னி பஸ்கள் மட்டுமே தங்களது பிற மாநிலப் பதிவெண்ணை ரத்து செய்துவிட்டு தமிழ் நாட்டில் மறுபதிவு செய்து முறையான அனுமதிச் சீட்டு பெற்று இயக்க ஆரம்பித்துள்ளனர்.

ஆனால், இன்னும் 793 ஆம்னி பஸ்கள் போக்குவரத்து ஆணையரகத்தின் மூலம் விடுக்கப்பட்ட பலகட்ட எச்சரிக்கைகளையும் மீறி, தங்களது முறைகேடான மற்றும் சட்டத்திற்குப் புறம்பான இயக்கத்தை நிறுத்தவில்லை.

எனவே, இத்தகைய முறைகேடாக மற்றும் சட்டத்திற்குப் புறம்பாக இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் இயக்கத்தை இனியும் அனுமதிக்க இயலாது. மேலும், இவ்வாறு முறைகேடாக மற்றும் சட்டத்திற்குப் புறம்பாக இயங்கும் ஆம்னி பஸ்களின் உரிமையாளர்களின் மீதும் அவர்கள் முறைகேடாக எவ்வாறு பிற மாநிலங்களில் போலி ஆவணங்கள் கொடுத்து பதிவெண்ணும், அனுமதிச் சீட்டும் பெறுகிறார்கள் என்பது குறித்தும் ஆராயந்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

மாநிலம் முழுவதிலும் கடந்த 18.06.2024 முதல் தீவிர வாகன தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மாநிலம் முழுவதிலும் 62 ஆம்னி பஸ்கள் மேற்கூறிய விதிமீறல்களுக்காக முடக்கி வைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான இவ்வகை ஆம்னி பஸ்கள் அவற்றின் உரிமையாளர்களால் இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் என்னையும், போக்கு வரத்து ஆணையரையும் சந்தித்து அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு நல்குவதாகவும், மேற்கொண்டு 200 ஆம்னி பேருந்துகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் மறுபதிவு செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அனைத்து பஸ்களின் இயக்கத்தினையும் முறைப்படுத்துவதாகவும் உறுதி அளித்துள்ளனர்.

அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று அகில இந்திய சுற்றுலா விதிகளின் படி இயங்கும் ஆம்னி பஸ்கள் தொடர்ந்து இயங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை.

அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு விதிகளை மீறி இயக்கப்படும் பிற மாநிலப் பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் மட்டுமே முடக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News