தமிழ்நாடு (Tamil Nadu)

திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை காணலாம்.

திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிப்பு

Published On 2024-10-19 04:25 GMT   |   Update On 2024-10-19 04:25 GMT
  • பேச்சிப்பாறை அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் 250 கனஅடியில் இருந்து 150 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
  • 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 64.12 அடி நீர்மட்டம் உள்ளது.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக குமரி கடல் பகுதியில் சீற்றம் ஏற்பட்டது. ராட்சத அலைகள் எழும்பி குடியிருப்புகளுக்குள் புகுந்தது.

வானிலை மாற்றம் காரணமாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்த நிலையில், மலையோர கிராமங்களில் கனமழை நீடித்தது. இதன் காரணமாக குமரி மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனை தொடர்ந்து அணையில் இருந்து மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட் டது.

இந்த நிலையில் மாவட்டத்தில் மழை நீடிக்கும் என்று கூறப்பட்டதால், அணையின் நீர்மட்டத்தை கருத்தில் கொண்டு அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 250 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடியது.

திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் மாவட்டத்தில் எதிர்பார்த்தபடி மழை பெய்யவில்லை. மாம்பழத்துறையாறு பகுதியில் 10 மி.மீட்டர், ஆணைக்கிடங்கு பகுதியில் 9.6, முள்ளங்கினாவிளை 7.2, அடையாமடை 6.8 என மிதமான அளவிலேயே மழை பெய்துள்ளது. இதனால் அணைகளுக்கு வரும் நீரின் வரத்து குறைந்துள்ளது.

இதனை தொடர்ந்து பேச்சிப்பாறை அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் 250 கனஅடியில் இருந்து 150 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மதகுகள் வழியாக 556 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 48 அடி கொள்ளளவு கொண்ட அணையில் தற்போது நீர்மட்டம் 42.74 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 278 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது.

77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 64.12 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 91 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மதகுகள் வழியாக 160 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 54.12 அடி கொள்ளளவு கொண்ட மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 50.11 அடியாக உள்ளது. 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு1 மற்றும் 2 அணைகளில் 14.46 மற்றும் 14.56 அடி நீர்மட்டம் உள்ளது. 25 அடி கொண்ட முக்கடல் அணையில் 16.4 அடியாக நீர்மட்டம் உள் ளது.

பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் திறப்பு குறைக்கப்பட்டாலும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் அதிக அளவே கொட்டுகிறது. இதனால் இன்றும் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுமுறை தினமான இன்று திற்பரப்பு வந்த பலரும் ஏமாற்றமடைந்தனர்.

Tags:    

Similar News