தமிழ்நாடு

பா.ஜனதா 450 தொகுதிகளில் வென்று மோடி 3வது முறையாக பிரதமராவது உறுதி- அண்ணாமலை

Published On 2023-12-28 04:05 GMT   |   Update On 2023-12-28 06:03 GMT

நாகப்பட்டினம்:

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் தமிழக முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி அவர் நாகை மாவட்டம் கீழ்வேளூரில் நடை பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து பேசினார். அவர்களிடம் கோரிக்கை மனுக்களையும் வாங்கினார்.பின்னர் அங்கு நடைபெற்ற கூட்டத்தில் அவா் பேசியதாவது:-

2014-ஆம் ஆண்டு மோடி பிரதமராக பதவி ஏற்றதிலிருந்து 4 கோடி வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. 67 சதவீதமாக இருந்த வீட்டு எரிவாயு குழாய் இணைப்பு 99.99 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது. ஏழைகள் அனைவருக்கும் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு எந்தவித ஊதிய இழப்பும் இல்லாமல் நேரடியாக அவா்களது ஊதியம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000 நிதி உதவி வழங்கப்படுகிறது.


2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு நாடு முழுவதும் 11 கோடி கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் 56 லட்சம் கழிவறைகள் கட்டித் தரப்பட்டுள்ளன.

சட்டப்பேரவை, பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை மோடி 2019-ஆம் ஆண்டு கொண்டு வந்தாா். அதன்படி, வரும் 2024-ஆம் ஆண்டு தோ்தலுக்கு பிறகு 3 எம்.எல்.ஏ.க்களில் ஒருவா் பெண்ணாக இருப்பாா்.

2024 நாடாளுமன்ற தோ்தலுக்கு பிறகு 3-வது முறையாக மீண்டும் மோடி பிரதமராவது உறுதி. பா.ஜனதா 400 முதல் 450 தொகுதிகளில் வென்று மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைவது உறுதி.

நரேந்திர மோடியின் ஆட்சியில் நாட்டின் வளா்ச்சி விகிதம் 7 சதவீதத்திற்கும் மேல் உயா்ந்துள்ளது. உலக அரங்கில் இந்தியாவுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

வரும் மக்களவைத் தோ்தலில் நாகை தொகுதியில் பா.ஜனதா வென்று சரித்திரத்தை மாற்றி அமைக்க பாடுபடுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News