ஆம்ஸ்ட்ராங் கொலையில் சரணடைந்தவரை சுட்டுக்கொல்ல அவசரம் ஏன்?- எடப்பாடி பழனிசாமி
- தி.மு.க. தமிழ்நாட்டு மக்களையும் தமிழக விவசாயிகளையும் பற்றி கவலைப்படவில்லை.
- மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை கைப்பற்றும் போது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்றதாக சொல்கிறார்கள்.
வேலூர்:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று காலை வேலூர் மாவட்டம் காட்பாடி வந்தார். ரெயில் மூலம் வந்த அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
விக்கிரவாண்டி தேர்தலை பொருத்தவரை ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை. பண பலம், அதிகார பலத்தால் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.
கர்நாடக அரசு தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீரை வழங்க வேண்டும். ஆனால் இன்றைக்கு அவர்கள் கூட்டணியில் இடம் பெற்றுள்ள தி.மு.க. அதைப் பற்றி எல்லாம் பேசுவது கிடையாது.
தி.மு.க. தமிழ்நாட்டு மக்களையும் தமிழக விவசாயிகளையும் பற்றி கவலைப்படவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவின்படி நமக்கு வழங்க வேண்டிய தண்ணீரை தான் நாம் கேட்கிறோம்.
தி.மு.க.க்கு கூட்டணி தான் முக்கியம். ஆட்சி அதிகாரம் தான் முக்கியம். இந்தியா கூட்டணியில் தான் காங்கிரஸ் உள்ளது. தமிழக முதலமைச்சர் காவிரி தண்ணீருக்காக எந்தவித குரலையும் கொடுக்கவில்லை.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சுட்டுக்கொல்லப்பட்ட திருவேங்கடம் என்ற நபர் ஏற்கனவே சரண் அடைந்தவர். சரணடைந்தவரை அதிகாலையிலேயே வேக வேகமாக அழைத்துச்சென்றது ஊடகத்தின் மூலமாக பார்த்து தெரிந்து கொண்டேன்.
அவர் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை எடுப்பதற்காக அழைத்துச் சென்றதாக தெரிகிறது. அப்படி அழைத்துச் சென்றவரை கை விலங்கு போட்டு தான் அழைத்துச் செல்ல வேண்டும்.
மேலும் பாதுகாப்பாக சென்று இருக்க வேண்டும். மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை கைப்பற்றும் போது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்றதாக சொல்கிறார்கள்.
ஏன் அவர் அவசர அவசரமாக சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
இதில் சந்தேகம் இருப்பதாக தெரிகிறது. ஆம்ஸ்ட்ராங்கின் உறவினர்கள் மற்றும் கட்சியை சேர்ந்தவர்கள் உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் இப்போது செய்யப்பட்ட என்கவுண்டர் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.