தமிழ்நாடு

நடுக்கடலில் மீனவர்கள் மோதல்: பைபர் படகு கவிழ்ந்ததில் நாகை மீனவர் பலி

Published On 2024-02-26 03:39 GMT   |   Update On 2024-02-26 05:09 GMT
  • பாலகுமார் உள்ளிட்ட 8 பேர் விசைபடகின் மூலம் ஆத்மநாதன் பைபர் படகில் வேகமாக மோதினர்.
  • கடலில் விழுந்து மாயமான காலாத்திநாதனை சகமீனவர்கள், கடலோர காவல் படையினர் தேடி வருகிறார்கள்.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுக பகுதியை சேர்ந்தவர்கள் ஆத்மநாதன் (வயது 33), சிவநேசசெல்வம் (25), காலாத்திநாதன் (22). 3 பேரும் சகோதர்கள். இவர்கள் நேற்றிரவு பைபர் படகில் நாகை துறைமுகத்திற்கு கிழக்கே சுமார் 2 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது நாகப்பட்டினம் கீச்சாங்குப்பம் பகுதியை சேர்ந்த பாலகுமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதர், காளியப்பன், பாலகிருஷ்ணன், வேலாயுதம், மாரியப்பன், கண்ணன், தண்டயுதபாணி, பாலகுமார் உள்ளிட்ட 8 பேர் விசைபடகில் அங்கு மீன் பிடிக்க வந்தனர். பின்னர் ஆத்மநாதன் மீன் பிடிப்பதற்காக கடலில் விரித்து வைத்திருந்த வலையை அறுத்து விட்டு சென்றனர். இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அது கோஷ்டி மோதலாக உருவெடுத்தது.

இதில் ஆத்திரமடைந்த பாலகுமார் உள்ளிட்ட 8 பேர் விசைபடகின் மூலம் ஆத்மநாதன் பைபர் படகில் வேகமாக மோதினர். இதனால் பைபர் படகு நடுகடலில் கவிழ்ந்தது. அதில் இருந்த ஆத்மநாதன், சிவநேசசெல்வம், காலாத்திநாதன் ஆகிய 3 பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். கடலில் விழுந்தவர்கள் கவிழ்ந்த பைபர் படகை பிடித்து கொண்டு நீந்தினர். இதைத் தொடர்ந்து பாலகுமார் உள்ளிட்ட 8 பேரும், கடலில் தத்தளித்த 3 பேரையும் பயங்கர ஆயுதங்களால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இந்நிலையில் அங்கு மீன் பிடித்து கொண்டிருந்த நம்பியார்நகரை சேர்ந்த மீனவர்கள், கடலில் தத்தளித்தவர்களை மீட்க வந்தனர். இதற்குள் கடலில் விழுந்த காலாத்திநாதன் மாயமானார். இதைத் தொடர்ந்து ஆத்மநாதன், சிவநேசசெல்வம் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவநேசசெல்வம் இறந்தார். ஆத்மநாதனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீதர், காளியப்பன், பாலகிருஷ்ணன், வேலாயுதம், மாரியப்பன், கண்ணன், தண்டயுதபாணி உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். பாலகுமார் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் கடலில் விழுந்து மாயமான காலாத்திநாதனை சகமீனவர்கள், கடலோர காவல் படையினர் தேடி வருகிறார்கள். அசம்பாவிதங்களை தடுக்க 2 கிராமத்திலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோஷ்டி மோதலில் மீனவர் ஒருவர் இறந்தது, கடலில் விழுந்து மீனவர் மாயம் ஆகிய சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News