சென்டர் மீடியனில் மோதிய அரசு பஸ்- சென்னை, மதுரை பயணிகள் 15 பேர் படுகாயம்
- மோதிய வேகத்தில் பஸ் கவிழ்ந்ததால் இடிபாடுகளுக்குள் சிக்கி சுமார் 15 பேர் காயமடைந்தனர்.
- காயமடைந்த பலர் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
வடமதுரை:
சென்னையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி அரசு விரைவு பஸ் இன்று காலை திருச்சி சாலையில் வந்து கொண்டிருந்தது. சென்னையை சேர்ந்த டிரைவர் தியாகராஜன் என்பவர் பஸ்சை ஓட்டிவந்தார். திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நடுப்பட்டி அருகே வந்தபோது திடீரென சாலையின் நடுவில் இருந்த சென்டர் மீடியனில் பஸ் மோதி சுமார் 1 கி.மீ தூரம் இடித்து சென்றது.
இதனால் பயங்கர சத்தம் ஏற்படவே பயணிகள் அனைவரும் கூச்சலிட்டனர். இதனைதொடர்ந்து பஸ் நிறுத்தப்பட்டது. இதில் 35-க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து கொண்டிருந்தனர். மோதிய வேகத்தில் பஸ் கவிழ்ந்ததால் இடிபாடுகளுக்குள் சிக்கி சுமார் 15 பேர் காயமடைந்தனர்.
இதைபார்த்ததும் அருகில் இருந்த கடைக்காரர்கள் ஓடிவந்து அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு திண்டுக்கல் மற்றும் மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் சென்னையை சேர்ந்த சிவசங்கரன்(31), மயிலாப்பூரை சேர்ந்த கபாலி(40), மாரிமுத்து (51), முருகன்(46), ராணிப்பேட்டையை சேர்ந்த ரவி(45), மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்த விஜயலட்சுமி, சென்னை அசனாபுரத்தை சேர்ந்த பாட்சா(21), கொடுங்கயூரை சேர்ந்த ஜெகநாதன்(65), சையதுஅப்ரிடி (19), வடபழனியை சேர்ந்த தியாகராஜன், திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த முருகன்(58) ஆகியோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டிரைவர் உறக்கத்தால் இந்த விபத்து ஏற்பட்டதாக பயணிகள் தெரிவித்தனர். காயமடைந்த பலர் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.