தமிழ்நாடு (Tamil Nadu)

இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க சந்திரபாபுநாயுடு, நிதிஷ்குமார் ஆதரவு அளிக்கவேண்டும் - திருமாவளவன்

Published On 2024-06-05 05:05 GMT   |   Update On 2024-06-05 05:05 GMT
  • காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றியை பெற்றுள்ளது.
  • தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய உறுதுணையாக இருப்பேன்.

அரியலூர்:

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் 1,03,554 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். சிதம்பரம் தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட கலெக்டருமான ஆனி மேரி ஸ்வர்ணா வெற்றி சான்றிதழை, தொல். திருமாவளவனிடம் வழங்கினார்.

பின்னர் தொல். திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய அளவில் 400 இடங்களை வெல்வோம் என்று கூறிய மோடி தலைமையிலான அரசு தோல்வி அடைந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. இது சங்பரிவார் அமைப்பிற்கும், பொது மக்களுக்கும் இடையே நடைபெற்ற போர். இந்த போரில் மக்கள் வெற்றி பெற்றுள்ளனர். இது சங்பரிவார் அமைப்புக்கும் மோடிக்கும் பின்னடைவு.

இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார், ஷின்டே தலைமையிலான சிவசேனா கட்சி உள்ளிட்டவர்கள் காங்கிரஸ் கூட்டணி கட்சிக்கு ஆதரவு வழங்கி, காங்கிரஸ் கட்சி தலைமையில் ஆட்சி அமைக்க உதவ வேண்டுமென்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் தற்பொழுது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 2 இடங்களில், விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெற்றதன் மூலம், அங்கீகாரம் பெற்ற கட்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுமக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாநில கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு அடுத்தார் போல் விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக தேர்வாகியுள்ளது.

ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான பா.ம.க., தே.மு.தி.க., ஆகியவை அங்கீகாரத்தை இழந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுமக்களின் ஆதரவுடன் மாநில அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக தேர்வாக வாக்களித்த பொது மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 2 முறை பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த போது, எதிர்க்கட்சி வரிசையில் இருந்ததால் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியை விட வேற எந்த வளர்ச்சி திட்டங்களையும் என்னால் செய்ய முடியவில்லை.

தற்பொழுது காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்தால், ஆளுங்கட்சி உறுப்பினர் என்ற முறையில் என்னால் முடிந்த வளர்ச்சிப் பணிகளை பாராளுமன்ற தொகுதிக்கும், தமிழகத்திற்கும் செய்வேன். தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய உறுதுணையாக இருப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், எம்.எல்.ஏ.க்கள் கா.சொ.க.கண்ணன், சிந்தனை செல்வன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News