இறைச்சி கழிவுகள் குப்பைகளுடன் கொட்டப்படும் அவலம்- தினமும் 250 டன் குவிவதால் அதிகாரிகள் திணறல்
- மாநகராட்சி அதிகாரிகள் அங்கீகாரம் இல்லாத இறைச்சி கடைகளை கணக்கெடுத்து அதற்கு கடிவாளம் போடும் வகையில் செயல்பட வேண்டும்.
- கேரளாவில் இறைச்சி கழிவுகளை பதப்படுத்தி பின்னர் அதனை தீவனமாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
சென்னையில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவ உணவுகளையே அதிகம் விரும்பி சாப்பிடுபவர்களாக இருக்கிறார்கள்.
இதன் காரணமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சாலையோர இறைச்சி கடைகள் அதிகரித்து வருகின்றன.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உரிய அனுமதி பெற்று 2,236 இறைச்சி கடைகள் செயல்பட்டு வருகின்றன.
ஆனால் வார இறுதி நாட்களில் எந்த அனுமதியும் பெறாமல் நடத்தப்படும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் திறக்கப்பட்டு விற்பனை படு ஜோராக நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான சிறிய கோழி கடைகளும் சாலை ஓரங்களில் செயல்படுகிறது. இப்படி செயல்படும் கடைகளில் இருந்து தான் இறைச்சி கழிவுகள் குப்பையோடு குப்பையாக கொட்டப்படுவதும் சாலை ஓரங்களில் கொட்டப்படும் அவலமும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
அனுமதிக்கப்பட்ட 2236 கடைகளில் இருந்து தினமும் 250 டன் இறைச்சி கழிவுகள் குவிந்து வருகின்றன.
இவைகளை மாநகராட்சி ஊழியர்கள் நேரில் சென்று பெற்று விடுகிறார்கள்.
அதே நேரத்தில் அனுமதியின்றி நடத்தப்படும் சாலையோர இறைச்சிக்கடைகளில் ஒவ்வொரு வாரமும் அதிக அளவில் இறைச்சிகள் விற்பனையாகி முடிந்ததும் அதன் கழிவுகளை இறைச்சி வியாபாரிகள் மாநகராட்சி குப்பை தொட்டிகளிலோ அல்லது சாலை ஓரங்களிலோ கொட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதுபோன்ற இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதும் அதிகரித்து காணப்படுகிறது. இந்த இறைச்சி குவியல்களுக்குள் தெரு நாய்கள் சண்டை போடுவதும் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
சென்னை மாநகரில் ஏற்கனவே தெரு நாய்கள் அதிகமாக இருக்கும் நிலையில் இதுபோன்று சாலை ஓரங்களில் நாய்கள் சண்டையிடுவது பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது.
எனவே மாநகராட்சி அதிகாரிகள் அங்கீகாரம் இல்லாத இறைச்சி கடைகளை கணக்கெடுத்து அதற்கு கடிவாளம் போடும் வகையில் செயல்பட வேண்டும்.
அதுபோன்ற கடைகளில் இருந்து இறைச்சி கழிவுகளை மாநகராட்சி குப்பை தொட்டிகளிலோ பொது இடங்களிலோ கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பக்கத்து மாநிலமான கேரளாவில் இறைச்சி கழிவுகளை பதப்படுத்தி பின்னர் அதனை தீவனமாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இறகு கழிவுகளை பொடியாக்கி விட்டு மீதமுள்ள இறைச்சி கழிவுகளை நாய் மற்றும் கால்நடை தீவனமாக மாற்றி வருகிறார்கள். அதுபோன்ற ஒரு திட்டத்தை சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் மேற்கொள்ளலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.
எனவே இனிவரும் காலங்களில் இறைச்சி கழிவுகளை பொது இடங்களில் கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து சுகாதார சீர்கேட்டை தடுக்க மாநகராட்சி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.