தமிழ்நாடு

தொடர் கனமழை எதிரொலி: முதுமலை புலிகள் காப்பகம் இன்று முதல் 3 நாட்களுக்கு மூடல்

Published On 2024-07-20 05:09 GMT   |   Update On 2024-07-20 05:33 GMT
  • கனமழை காரணமாக முதுமலை புலிகள் காப்பகத்தில் மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
  • தெப்பக்காட்டில் இருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் வாகன சவாரியும் நிறுத்தப்பட்டுள்ளது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்த்து விட்டு, முதுமலை புலிகள் காப்பகம் சென்று விட்டு திரும்புவது தான் வழக்கம்.

முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்குள்ள வளர்ப்பு யானைகளை பார்க்கவும், வனத்திற்கு நடுவே சவாரி செய்யவும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள்.

இதனால் இங்கு எப்போதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தெப்பக்காடு பகுதியிலும் கடந்த ஒரு வார காலமாக கனமழை கொட்டியது.

கனமழை காரணமாக முதுமலை புலிகள் காப்பகத்தில் மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் நலன் கருதி இன்று முதல் வருகிற 22-ந்தேதி வரை 3 நாட்கள் முதுமலை புலிகள் காப்பகத்தின் சுழல் சுற்றுலா மூடப்படுகிறது.

மேலும் தெப்பக்காட்டில் இருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் வாகன சவாரியும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக வனச்சரக அலுவலர் கூறுகையில், வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்று மற்றும் கனமழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெப்பக்காட்டில் கடந்த ஒரு வாரம் பெய்த மழையால் மின்சாரம், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்று முதல் 3 நாட்களுக்கு முதுமலை புலிகள் காப்பகம் சுழல் சுற்றுலா மூடப்படுகிறது என்றார்.

Tags:    

Similar News