தமிழ்நாடு

தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் பனை மரம் ஏறும் பள்ளி மாணவன்

Published On 2022-06-09 05:03 GMT   |   Update On 2022-06-09 05:03 GMT
  • பரத் ரிஷி தனது தந்தை, தாய் கஷ்டப்பட்டு வருவதை கண்டு தந்தைக்கு உதவியாக பனைமரம் ஏறி தனது குடும்பச் செலவை கவனித்து வந்துள்ளார்.
  • உடல்நிலை சரியில்லாமல் வாங்கிய கடனுக்காக எனது தந்தை இரவு பகல் பாராமல் பனைமரம் ஏறி பதனீர் இறக்கி அதனை கருப்பட்டியாக காய்ச்சி வியாபாரிக்கு விற்பனை செய்து வந்தார்.

விளாத்திகுளம்:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ளது பல்லா குளம் கிராமம். இந்த கிராமத்தில் ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரம் பகுதியை சேர்ந்த முனீஸ்வரன்-செல்வி தம்பதியினர் அப்பகுதியில் குளக்கரையோரம் குடில் அமைத்து பனையேறும் தொழில் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் முனீஸ்வரனுக்கு உடல்நிலை பாதிப்பால் பனை மரம் ஏற முடியாமல் போனது. இதனால் தூத்துக்குடியில் 9-ம் வகுப்பு படித்து வந்த அவரது மூத்த மகன் பரத்ரிஷி (12) தற்போது பள்ளி கோடை விடுமுறை என்பதால் தனது தந்தைக்கு உதவியாக பனை மரம் ஏறி தனது குடும்ப செலவை கவனித்து வருகிறார்.

பரத் ரிஷிக்கு அக்காள் புவனா, தேவி தம்பி குரு ராகவன் உள்ளனர். தாய் செல்வியும் கூலி வேலைக்கு சென்று விட்டு மீதி நேரங்களில் கருப்பட்டி காய்ச்சி வருகிறார். குடும்ப செலவுக்கு போதுமான வருமானம் இன்றி சிரமப்பட்டு உள்ளனர்.

இதனை அறிந்த பரத் ரிஷி தனது தந்தை, தாய் கஷ்டப்பட்டு வருவதை கண்டு தந்தைக்கு உதவியாக பனைமரம் ஏறி தனது குடும்பச் செலவை கவனித்து வந்துள்ளார்.

உடல்நிலை சரியில்லாமல் வாங்கிய கடனுக்காக எனது தந்தை இரவு பகல் பாராமல் பனைமரம் ஏறி பதனீர் இறக்கி அதனை கருப்பட்டியாக காய்ச்சி வியாபாரிக்கு விற்பனை செய்து வந்தார். கடனை அடைப்பதற்கு கஷ்டப்பட்டு வருவதால் பனை மரம் ஏறும்போது பல இடங்களில் உடலில் காயங்கள் ஏற்பட்டு எனது தந்தை துயரப்படுவதை கண்டும் நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

பல நேரங்களில் தந்தை வீட்டுக்கு வருவது காலதாமதமாகி விடுவதால் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து உணவருந்த முடியாத ஒரு சூழல் ஏற்பட்டது.

எனவே என்னால் முடிந்த வரை தந்தைக்கு உதவியாக இருக்கவேண்டும் என்று நாள் ஒன்றுக்கு 20-க்கும் மேற்பட்ட பனை மரங்களில் ஏறி பதநீர் இறக்குகிறேன் என்றார்.

Similar News