பழனி கிரிவலப்பாதையில் பஞ்சாமிர்தம் விற்க கூடாது: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
- வணிகம் மற்றும் குடியிருப்புகளில் முறையாக வாடகை செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
- இந்த பகுதியில் தொடர்ந்து அளவீடு செய்து ஆக்கிரமிப்புகள் கண்டறிந்து, அவற்றை கோவில் நிர்வாகம், வருவாய்த்துறையினர், போலீசார் அகற்ற வேண்டும்.
மதுரை:
திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், கடந்த 2018-ம் ஆண்டில் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
பழனி மலையின் கிரிவலப்பாதையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, இதுகுறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் குழு அமைத்தது. பின்னர் அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, கிரிவலப்பாதையில் தனியார் வாகனங்களுக்கு தடை விதிப்பது, பக்தர்களுக்கு பேட்டரி கார் வசதி செய்வது, சுற்றுலா வாகனங்களுக்கு தனி இடவசதி செய்து தருவது என்பன உள்பட பல்வேறு உத்தரவுகளை ஏற்கனவே ஐகோர்ட்டு பிறப்பித்தது.
இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது கோவில் தரப்பில் ஆஜரான வக்கீல், "கிரிவலப்பாதைகளில் 80-க்கும் மேற்பட்ட கடைகள் தற்போதுவரை அகற்றப்பட்டு உள்ளன. 134 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன. அதில் வணிகம் மற்றும் குடியிருப்புகளில் முறையாக வாடகை செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "பழனி மலை கிரிவலப்பாதையில் வாகனங்கள் செல்ல முடியாதபடி, தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. கொடைக்கானல் சாலை பகுதியில் இருந்து கிரிவலப்பாதைக்கு அரசு வாகனங்கள், ஆம்புலன்ஸ் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்," என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், "இந்த பகுதியில் தொடர்ந்து அளவீடு செய்து ஆக்கிரமிப்புகள் கண்டறிந்து, அவற்றை கோவில் நிர்வாகம், வருவாய்த்துறையினர், போலீசார் அகற்ற வேண்டும். கிரிவலப்பாதைகளில் பஞ்சாமிர்தம் விற்பனை செய்வது உள்ளிட்ட எந்தவித வணிக நோக்க நடவடிக்கைகளும் இருக்கக்கூடாது.
ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகளை நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை கோவில் இணை ஆணையர் தாக்கல் செய்ய வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்குவது சம்பந்தமான நடவடிக்கை குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பதில் அளிக்க வேண்டும்" என உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தார்.