பாராளுமன்ற தேர்தல்: 3 மாவட்டங்களில் 123 பறக்கும் படையினர் சோதனை
- மாவட்ட எல்லைகளில் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-425-7088, 044-27427412, 044-27427414 ஆகிய தொலை பேசி எண்களில் புகார்கள் பற்றி தெரிவிக்கலாம்.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு ஏப்ரல் மாதம் 19-ந்தேதி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்து உள்ளன.
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தம் 123 தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1417 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 178 வாக்குச் சாடிகள் பதட்டமானவையாக கண்டறியப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 12 பறக்கும் படை குழுக்களும், 12 கண்காணிப்பு குழுக்களும், 4 காணொலி கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன. மாவட்ட எல்லைகளில் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் விதிமுறைகளால் காஞ்சிபுரத்திற்கு பட்டு புடவைகள் வாங்குவதற்கு அதிக அளவில் பணம் எடுத்து வருபவர்கள் சிரமம் அடைந்து உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் 21 பறக்கும் படைகள், 21 நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 14 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத் தப்பட்டு உள்ளன. 24 மணிநேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டு உள்ளது. கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-425-7088, 044-27427412, 044-27427414 ஆகிய தொலை பேசி எண்களில் புகார்கள் பற்றி தெரிவிக்கலாம்.
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 90 பறக்கும் படையினர் மற்றும் 90 நிலை கண்காணிப்பு குழுக்கள், 20 காணொலி கண்காணிப்பு குழுக்கள், 10 காணொலி பார்வையாளர் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் வேட்பாளர்களின் செலவினங்களை கண்காணிக்க 10 உதவி செலவின குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் சோதனையை தீவிரப்படுத்தி கண்காணித்து வருகிறார்கள்.