தமிழ்நாடு

சத்குருவை வரவேற்க தயாராகும் கொங்கு மண்டலம்! 52 இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்க திட்டம்

Published On 2022-06-20 12:13 GMT   |   Update On 2022-06-20 12:13 GMT
  • மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து தனது பயணத்தை தொடங்கிய சத்குரு நாளை தமிழகம் திரும்புகிறார்
  • கொடிசியாவில் நாளை மாலை நடைபெறும் உலக யோகா தின நிகழ்ச்சியில் சத்குரு பங்கேற்கிறார்.

கோவை:

மண் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்தில் 65 வயதில் சுமார் 30,000 கி.மீ மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள சத்குரு நாளை (ஜூன் 21) தமிழ்நாடு திரும்ப உள்ளார். இதையொட்டி, கொங்கு மண்டலத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க தன்னார்வலர்களும், பொது மக்களும் தயாராகி வருகின்றனர்.

சத்தியமங்கலம் வழியாக தமிழ்நாட்டிற்குள் வரும் சத்குருவிற்கு பண்ணாரி கோவில் அருகே மேள தாளங்களுடன் தன்னார்வலர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். இதை தொடர்ந்து எஸ்.ஆர்.டி கார்னர், புங்கம்பள்ளி, செல்லப்பன் பாளையம், அன்னூர் பேருந்து நிலையம் என சூலூர் வரை 30-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களும், கிராம மக்களும் திரளாக வந்து சத்குருவை வரவேற்க உள்ளனர்.

அதன்பிறகு, சூலூர் விமானப் படை தளத்தில் நடைபெறும் 'மண் காப்போம்' இயக்க நிகழ்ச்சியிலும் மாலையில் கொடிசியாவில் நடைபெறும் உலக யோகா தின நிகழ்ச்சியிலும் சத்குரு பங்கேற்கிறார்.



பின்னர், அங்கிருந்து, பேரூர், மாதம்பட்டி, இருட்டுப்பள்ளம் வழியாக இரவு 8.30 மணியளவில் ஆதியோகியை வந்து அடைய உள்ளார். வரும் வழியெங்கும் கிராம மக்களும், பழங்குடி மக்களும் பறையாட்டம், தேவராட்டம், ஜமாப், ஒயிலாட்டம், சிவ வாத்தியம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் சத்குருவை வரவேற்க உள்ளனர். ஆதியோகி முன்பு நடக்கும் நிறைவு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து தனது பயணத்தை தொடங்கிய சத்குரு, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகள் வழியாக இந்தியா வந்து பல்வேறு மாநிலங்களுக்கு பயணம் செய்தார். சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய இப்பயணத்தின் மூலம் இதுவரை 74 நாடுகள் 'மண் காப்போம்' இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தியாவில் இதுவரை 8 மாநிலங்கள் 'மண் காப்போம்' இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. உலகம் முழுவதும் உள்ள 320 கோடி மக்களின் ஆதரவை இவ்வியக்கம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News