தமிழ்நாடு (Tamil Nadu)

சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார் செந்தில் பாலாஜி - தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

Published On 2024-09-26 13:44 GMT   |   Update On 2024-09-26 13:50 GMT
  • கடந்த ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
  • செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த செந்தில் பாலாஜியின் சார்பில் வழக்கறிஞர் ராம் சங்கர் ஜாமின் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து கடந்த ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது.

இதைத்தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு வழங்கியது. செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்பட்ட செய்தி அறிந்து அவரது ஆதரவாளர்கள் சிறை வாசலில் குவிய தொடங்கினர்.

செந்தில் பாலாஜி நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்ட உத்தரவு இன்னும் கிடைக்கவில்லை என்றும், உச்சநீதிமன்ற உத்தரவின் நகல் கிடைத்த பிறகு இதில் முடிவு எடுப்பதாக சென்னை முதன்மை அமர்வு நீதிபதி கார்த்திகேயன் தெரிவித்திருந்தார். இதனால் செந்தில் பாலாஜி எப்போது சிறையில் இருந்து வெளியே வருவார் என்ற கேள்வி எழுந்தது.

இது தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து பிணை உத்தரவாதத்தை ஏற்பதில் ஆட்சேபனை இல்லை என அமலாக்கத்துறை தெரிவித்தது. உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் செந்தில் பாலாஜி தரப்பில் ரூ.25 லட்சம் இரு நபர் ஜாமின் உத்தரவாதம் முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் செந்தில் பாலாஜி ஜாமினில் வெளியே வர தடை இல்லை என உத்தரவிட்டார். செந்தில் பாலாஜியை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, அவரது பாஸ்போர்ட் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. 471 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி வெளியே வந்துள்ளார்.

சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜிக்கு அவரது ஆதரவாளர்கள், திமுக-வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் அந்த பகுதியில் லேசான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags:    

Similar News