தமிழ்நாடு

தாரமங்கலத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பஜனை பெருமாள் கோவிலில் 7 சாமி சிலைகள் திருட்டு

Published On 2023-05-21 07:30 GMT   |   Update On 2023-05-21 07:30 GMT
  • ஐம்பொன் சிலைகள் உட்பட 7 சாமி சிலைகளை திருடி சென்றனர். கருட ஆழ்வார் சிலை மட்டும் தப்பியது.
  • திருடப்பட்ட 7 சிலைகளின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

தாரமங்கலம்:

சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஊர்ச்சாவடி அருகில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பஜனை பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான சுமார் முக்கால் அடி உயரம் கொண்ட 3 ஐம்பொன் சிலைகளும், அரை அடி உயரம் கொண்ட 4 சிலைகளும் உள்ளது.

இந்த கோவிலில் பூஜை செய்து வரும் பூசாரி குமரவேல் நேற்று வழக்கம்போல் பூஜைகள் முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் இரவு நேரத்தில் கோவிலில் காவலாளிகள் யாரும் இல்லாததை நோட்டமிட்டுள்ளனர்.

இதை சாதகமாக பயன்படுத்தி மர்ம நபர்கள், நேற்று நள்ளிரவு சாமி சிலைகள் வைக்கப்பட்டு இருந்த அறையின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். இதையடுத்து அங்கிருந்த ஐம்பொன் சிலைகள் உட்பட 7 சாமி சிலைகளை திருடி சென்றனர். கருட ஆழ்வார் சிலை மட்டும் தப்பியது.

இன்று காலையில் கோவிலுக்கு வந்த பூசாரி குமரவேல் கோவில் பூட்டு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு ஐம்பொன் சிலைகள் உள்பட 7 சிலைகள் திருட்டு போயியுள்ளதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார்.

திருடப்பட்ட 7 சிலைகளின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

இது பற்றி அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் தெரிவித்தார். மேலும் இந்த தகவல் காட்டு தீ போல் ஊர் முழுவதும் பரவியது. இதனால் கோவில் முன்பு ஊர் மக்கள் மற்றும் பக்தர்கள் குவிந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோவில் முழுவதும் பார்வையிட்டனர். சிலைகள் திருடப்பட்ட அறைக்குள் சென்று, தடயங்கள் சேகரித்தனர்.

கொள்ளை குறித்து, பூசாரி மற்றும் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார், கொள்ளையர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.

இந்த சம்பவத்தால், அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.

Tags:    

Similar News