மதுரை அ.தி.மு.க. மாநாட்டுக்கு புதிய சிக்கல்.. காரணம் யார் தெரியுமா?
- மாநாட்டிற்காக பிரம்மாண்ட மேடை, பந்தல் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன.
- மாநாட்டிற்காக உரிய தடையில்லை சான்று பெறவில்லை என குற்றம்சாட்டு எழுந்துள்ளது.
மதுரையில் அ.தி.மு.க. வரலாற்றின் எழுச்சி மாநாடு வரும் 20-ம் தேதி பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதற்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக மதுரை ரிங் ரோடு வலையங்குளம் பகுதியில் சுமார் 65 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விறுவிறுப்பாக இரவு பகலாக பணியாற்றி வருகிறார்கள். சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாகன நிறுத்துமிடம் மற்றும் உணவு தயாரிப்புக்கூடம், உணவு பரிமாறும் அரங்குகள் என்று சுமார் 300 ஏக்கர் பரப்பில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டுக்கு தடை விதிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மாநாட்டிற்காக மதுரை விமான நிலைய அதிகாரியிடம் உரிய தடையில்லை சான்று பெறவில்லை என குற்றம்சாட்டு எழுந்துள்ளது.
மாநாடு நடைபெற உள்ள இடம் விமான நிலையத்தின் அருகில் உள்ளதால் வான வேடிக்கை வெடிக்கும் போது அசம்பாவிதம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.