தமிழ்நாடு (Tamil Nadu)

ஊட்டி போலீஸ் நிலையத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மீது தி.மு.க. கவுன்சிலர் புகார்

Published On 2023-11-02 03:50 GMT   |   Update On 2023-11-02 03:50 GMT
  • நகராட்சி துணைத்தலைவர் ரவிக்குமார் மற்றும் தி.மு.க. கவுன்சிலர் முஸ்தபா ஆகியோர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
  • அண்ணாமலை தவறான அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும், தவறான தகவலை பரப்பி வருவதாகவும் கூறி கவுன்சிலர் முஸ்தபா ஊட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி மார்க்கெட் பகுதியில் ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த கடைகள் அனைத்தும் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் அதனை இடித்து விட்டு புதிதாக கடைகள் கட்டும் பணியை, நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இதற்காக முதல்கட்டமாக ரூ.36 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் கடந்த 30-ந்தேதி நடந்த ஊட்டி நகராட்சி மாதாந்திர கூட்டத்தில் மார்க்கெட் கடைகள் கட்டுவது தொடர்பாக நகராட்சி துணைத்தலைவர் ரவிக்குமார் மற்றும் தி.மு.க. கவுன்சிலர் முஸ்தபா ஆகியோர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

நகராட்சி துணைத்தலைவர் ரவிக்குமார் ரூ.36 கோடி பெற்றதாக தி.மு.க கவுன்சிலர் முஸ்தபா நகராட்சி கூட்டத்தில் பேசியதாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அண்ணாமலை தவறான அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும், தவறான தகவலை பரப்பி வருவதாகவும் கூறி கவுன்சிலர் முஸ்தபா ஊட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து தி.மு.க கவுன்சிலர் முஸ்தபா கூறியதாவது:-

நகராட்சி மார்க்கெட் கடைகள் கட்டுவது தொடர்பாக மட்டுமே பேசினேன். வேறு எதை பற்றியும் பேசவில்லை.

ஆனால் நகராட்சி துணைத் தலைவர் ரவிக்குமார் ரூ.36 கோடி பெற்றதாக நான் பேசியதாக தவறான தகவலை பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News