தமிழ்நாடு (Tamil Nadu)

மதுரையில் எய்ம்ஸ் அமைக்கப்படும் என்று அறிவித்து 5 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்? மத்திய அரசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி

Published On 2024-08-29 07:56 GMT   |   Update On 2024-08-29 08:45 GMT
  • பணிகள் தொடங்கப்பட்டு 2026-க்குள் நிறைவடைந்துவிடும்.
  • கொரோனா காலகட்டத்தை காரணம் காட்ட வேண்டாம்.

மதுரை:

மதுரையை சேர்ந்த பாஸ்கர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதால், ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, அவர்களின் வாழ்க்கை தரம் உயர உதவியாக இருக்கும். தென் தமிழகத்தைச் சேர்ந்த மக்கள் சிறந்த மருத்துவ வசதியை பெறவும் வாய்ப்பாக இருக்கும்.

இதனை கருத்தில் கொண்டு 2015 ஆம் ஆண்டு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தாலும் 2018 ஆம் ஆண்டு தான் மதுரை தோப்பூர் பகுதி தேர்வு செய்யப்பட்டது. பிரதமர் நேரில் வந்து அடிக்கல் நாட்டினார்.

இருப்பினும் இன்னமும் கட்டுமான பணிகள் நடைபெறாமல், நீண்ட காலமாக கிடப்பிலேயே உள்ளது. கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பல்வேறு வழக்குகள் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல்வேறு உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இதுவரை கட்டுமான பணிகளை தொடங்கப்படவில்லை.

எனவே மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை விரைவுபடுத்தி, குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு வக்கீல் ஆஜராகி, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான டெண்டர் விடப்பட்டு விட்டது. பணிகள் தொடங்கப்பட்டு 2026-க்குள் நிறைவடைந்துவிடும். இடையில் கொரோனா காலம் ஏற்பட்டதால் தாமதம் ஆகிவிட்டது என தெரிவித்தார்.

ஆனால் நீதிபதிகள், கொரோனா காலகட்டத்தை காரணம் காட்ட வேண்டாம். அதற்கு முன்பும் பின்பும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என கேள்வி எழுப்பினர். விசாரணை முடிவில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் எப்போது நிறைவடையும்? என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலர் எழுத்து பூர்வ அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 24-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags:    

Similar News