தமிழ்நாடு (Tamil Nadu)

நட்பை பிரிந்த சோகம்- சாரை பாம்பு இறந்ததால் தவித்த நல்ல பாம்பு

Published On 2022-11-06 05:02 GMT   |   Update On 2022-11-06 05:02 GMT
  • சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பகுதிைய சேர்ந்தவர் பிரபாகரன்.
  • நல்லபாம்பின் இந்த செயல் தீயணைப்பு வீரர்களின் நெஞ்சை நெகிழ செய்தது.

காடையாம்பட்டி:

படையை நடுங்க செய்யும் பாம்பிற்கும், நட்பு-பிரிவின் வலி உண்டு. இதற்கு உதாரணமாக ஒரு நெகிழ்ச்சி சம்பவம் சேலம் மாவட்டத்தில் நடந்துள்ளது.

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பகுதிைய சேர்ந்தவர் பிரபாகரன். விவசாயி. இவர் அதே பகுதியில் உள்ள தனது விவசாய தோட்டத்தில் பூ செடிகள் சாகுபடி செய்து வருகிறார்.

இந்த பூ செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் விதமாக அங்கு பண்ணை குட்டை ஒன்றை அமைத்துள்ளார். மேலும் குட்டையில் உள்ள தண்ணீர் நிலத்திற்கு அடியில் செல்லாமல் இருக்கும் வகையில் குட்டையின் அடிப்பகுதி உள்பட சுற்றிலும் தார்பாய் அமைத்துள்ளார். தற்போது பெய்த மழையால் அந்த குட்டையில் தண்ணீர் தேங்கி உள்ளது.

இந்த நிலையில் விவசாயி பிரபாகரன் தனது பூந்தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றபோது குழாயில் இருந்த 2 பாம்புகள் பண்ணை குட்டையில் விழுந்தது. அவைகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து விளையாடிய நிலையில் சாரை பாம்பு மயக்க முற்று தண்ணீருக்குள் இறந்தது. ஆனால் உடனிருந்த நல்ல பாம்பு தனது நட்பு பிரிந்த நிலையிலும் கூட அந்த இடத்தை விட்டு நகராமல் இறந்த பாம்பையே பார்த்துக்கொண்டிருந்தது.

இது பற்றி பிரபாகரன், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து நல்ல பாம்பை பிடிக்க முயன்றபோதிலும் அது, அங்கிருந்து தப்பி செல்லாமல், சாரை பாம்பை சுற்றி சுற்றி வந்தது.

வீரர்கள், ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு அந்த நல்லபாம்பை பிடித்து சாக்கு மூட்டையில் போட்டு எடுத்துச் சென்று வனப்பகுதியில் விட்டனர். நல்லபாம்பின் இந்த செயல் தீயணைப்பு வீரர்களின் நெஞ்சை நெகிழ செய்தது.

Similar News