தமிழ்நாடு

கவர்னர் நடவடிக்கை சரியா? தவறா? என்பதை விட செந்தில் பாலாஜி மீது சட்டப்படி நடவடிக்கை தேவை- குஷ்பு

Published On 2023-06-30 06:58 GMT   |   Update On 2023-06-30 06:58 GMT
  • செந்தில் பாலாஜியை காப்பாற்றுவதில் தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் இவ்வளவு தீவிரமாக இருப்பது ஏன்?
  • ஊழல் வழக்கில் சிக்கியவரை காப்பாற்ற ஆளும் கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும் இப்படி வரிந்து கட்டுவது இந்தியாவில் எங்கும் நடக்காத மாடல்.

சென்னை:

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார்.

இந்த நிலையில் அவரை கவர்னர் ஆர்.என்.ரவி 'டிஸ்மிஸ்' செய்து உத்தரவிட்டார். பின்னர் அந்த உத்தரவை நிறுத்தி வைத்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுதொடர்பாக பா.ஜனதா செயற்குழு உறுப்பினரும் தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்புவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

கவர்னர் எடுத்த நடவடிக்கை சரியா? தவறா? என்று விவாதிப்பதைவிட ஊழல் வழக்கில் சிக்கி இருக்கும் செந்தில்பாலாஜி மீது சட்டப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கை கட்டாயம் எடுத்தே ஆக வேண்டும்.

ஆனால் எனக்கு ஒரே ஒரு விஷயம் புரியவில்லை. இதேபோல் பா.ஜனதாவை சேர்ந்த ஒருவர் வழக்கில் சிக்கி இருந்தால் அவரை நீக்கியே தீர வேண்டும் என்று ஊழல் கூட்டணி கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்து இருக்குமே.

ஆனால் ஊழல் வழக்கில் சிக்கி ஒரு அமைச்சரே கைது செய்யப்பட்டு காவலில் இருந்தும் அவரை நீக்க வேண்டும் என்று எந்த கட்சியும் குரல் கொடுக்கவில்லையே ஏன்? பா.ஜனதாவுக்கு எதிரான கூட்டணியில் இருந்தால் ஊழல் செய்வது தப்பில்லை என்று அர்த்தமா?

செந்தில் பாலாஜியை காப்பாற்றுவதில் தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் இவ்வளவு தீவிரமாக இருப்பது ஏன்? அவர் முக்கியமானவர்களின் பெயர் விபரங்களை வெளியே சொல்லிவிடக் கூடாது என்று பயமா?

ஊழல் வழக்கில் சிக்கியவரை காப்பாற்ற ஆளும் கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும் இப்படி வரிந்து கட்டுவது இந்தியாவில் எங்கும் நடக்காத மாடல்.

இவ்வாறு குஷ்பு கூறினார்.

Tags:    

Similar News