தமிழ்நாடு (Tamil Nadu)

அ.தி.மு.க. ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ். தொடர்ந்து ஆலோசனை- இன்று தீர்ப்பு வெளிவர உள்ள நிலையில் பரபரப்பு

Published On 2022-11-21 03:33 GMT   |   Update On 2022-11-21 03:33 GMT
  • எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான நிர்வாகிகளை இழுக்கும் முயற்சியில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
  • பெரியகுளம் பண்ணை வீட்டில் கடந்த 3 நாட்களாக பல்வேறு மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.

பெரியகுளம்:

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சினை தலைதூக்கிய நிலையில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்கினார்.

இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தனக்கு ஆதரவான நிர்வாகிகளை மாவட்டம் மற்றும் நகரம் ஒன்றிய நிர்வாகிகளாக ஓ.பன்னீர்செல்வம் நியமித்து வருகிறார். புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் மூலம் பொதுக்குழு கூட்டத்தையும் விரைவில் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான நிர்வாகிகளை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். பெரியகுளம் பண்ணை வீட்டில் கடந்த 3 நாட்களாக பல்வேறு மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். 3ம் நாளான நேற்று சேலம் திருச்சி, விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.

பொதுக்குழுவை கூட்ட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் தங்களுக்கு பாதகமாக வரும் பட்சத்தில் அதனை எதிர்கொள்ளும் முறை குறித்து ஆலோசித்தனர். இதனிடையே ஓ.பன்னீர்செல்வம் மீதான வழக்கு ஒன்றில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளதால் நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்த புகழேந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் எங்களுக்கு ஆதரவான தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் உள்ள தொண்டர்கள் அனைவரும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க.வையே எதிர்பார்க்கின்றனர். இருந்தபோதும் ஓ.பன்னீர்செல்வம் அனைவரையும் அரவணைத்து செல்ல முயற்சி மேற்கொண்டு வருகிறார். அதனை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஏற்க மறுக்கின்றனர்.

எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது புதிதாக கட்டப்பட்ட 11 மருத்துவ கல்லூரியில் மாபெரும் ஊழல் நடைபெற்றதற்கான முகாந்திரம் உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. எனவே எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். அ.தி.மு.கவை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் ஓ.பன்னீர்செல்வம் மீட்டெடுத்து மீண்டும் ஆட்சியில் அமர வைப்பார் என்ற நம்பிக்கை தொண்டர்கள் மத்தியில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News