கூவம் நதிக்கு ஒதுக்கிய பணத்தை கூவத்துக்குள் போட்டு விட்டார்கள்- எல்.முருகன் விமர்சனம்
- சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுவேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேயராக இருக்கும்போதே சொன்னார்.
- கூவம் ஆற்றை சீரமைக்க ரூ.500 கோடி செலவு செய்ததற்கான வெள்ளையறிக்கையை மேயர் பிரியா வெளியிட வேண்டும்.
தூத்துக்குடி:
நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அவர் தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேயர், துணை முதலமைச்சராக இருக்கும்போது, சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுவோம், சிங்கப்பூராக மாற்றுவோம் என்றார். அவர் தற்போது முதலமைச்சராக உள்ளார்.
ஆனால் கூவம் நதிக்கு ஒதுக்கிய பணத்தை கூவத்துக்குள் போட்டு விட்டார்கள். கூவம் ஆற்றை சீர்படுத்த பெரிய மாஸ்டர் பிளான் வேண்டும். எந்த சார்பு நிலையும் இல்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூவம் ஆறு பணிகள் குறித்து ரூ.500 கோடிக்கு வெள்ளை அறிக்கை கொடுங்கள் என்கின்றார். நானும் கேட்கின்றேன் வெள்ளை அறிக்கை கொடுங்கள். உண்மையாக சீரமைக்க வேண்டும் என்றால் நல்லபடியாக அதுகுறித்து படிக்க வேண்டும்.
இலங்கையில் எந்த அதிபர் வந்தாலும் நல்ல சுமூகமான உறவை கடைபிடித்துக் கொண்டிருக்கின்றோம். தொடர்ந்து மீனவர்களை விடுவிக்க கேட்டு கொண்டு இருக்கின்றோம். மீனவர்கள் மறுவாழ்வு, ஜி.பி.எஸ். கருவி இல்லாமல் எல்லை தாண்டாமல் இருக்க ரூ. 17 கோடிக்கு தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கி கொடுத்துள்ளோம்.
மது ஒழிப்பு மாநாடு நாடகம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருமாவளவன் திட்டமிட்டு செயல்படுத்துகிற ஒரு நாடகம். 17 நாட்கள் தமிழக முதலமைச்சர் அமெரிக்கா சென்றார். அங்கிருந்து எதிர்பார்த்த முதலீடு தமிழ்நாட்டிற்கு வரவில்லை. பல நிறுவனங்கள் ஏற்கனவே இருக்கிற நிறுவனங்கள் தான், முதலீடு பற்றி மக்கள் கேள்வி கேட்கவில்லை. இதனால் மக்களை திசை திருப்ப திட்டமிட்ட அரங்கேற்றப்பட்ட நாடகம் தான் இது.
தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு முழுமையாக சீரழிந்து இருக்கிறது. கடந்த 3 வருடமாக எங்கு பார்த்தாலும் கொலைகள், கொலையில் சரியான விசாரணை கிடையாது. சரியான கைதுகள் கிடையாது. எனவே சட்டம், ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக விமான நிலையத்தில் மத்திய மந்திரி எல்.முருகனுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சித்ராங்கதன், வடக்கு மாவட்ட தலைவர் சென்ன கேசவன் தலைமையில் பா.ஜனதா நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.