தமிழ்நாடு (Tamil Nadu)

மருத்துவர்களின் ஊதிய உயர்வை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்- பிரேமலதா விஜயகாந்த்

Published On 2024-07-01 07:05 GMT   |   Update On 2024-07-01 07:05 GMT
  • மக்கள் உயிரைக் காப்பதில் கடவுளுக்கு அடுத்தபடியாக வாழும் தெய்வங்களாக நாம் கருதுவது மருத்துவர்களைத் தான்.
  • மருத்துவர்கள் தினத்தில் மருத்துவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.

சென்னை:

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மருத்துவர்களின் வரலாற்றில், மறக்க முடியாத நாள் இன்று மருத்துவர்கள் தினம்! மருத்துவத்துறையில் முன்மாதிரியான மாநிலமாகத் திகழும் நமது தமிழ்நாட்டில், அரசு மருத்துவர்களுக்குக் குறைவான ஊதியம் அளிக்கப்படுவது மிகவும் அவமானத்திற்குரியது.

தகுதிக்கு ஏற்ற ஊதியம் வேண்டி அரசு மருத்துவர்கள் நீண்ட காலமாகவே போராடி வருகின்றனர். 2019-ம் ஆண்டு நடந்த போராட்டத்தின்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நம்முடைய முதல்வர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது மட்டுமில்லாமல், தி.மு.க. ஆட்சியில் அரசு மருத்துவர்களின் ஊதிய கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார். மேலும் 2021-ம் ஆண்டு இதே மருத்துவ தினத்தன்று "இந்த அரசு மக்களுக்கான அரசு மட்டுமல்ல, மருத்துவர்களுக்கான அரசும் தான் "எனவும் தெரிவித்தார்.

தி.மு.க. ஆட்சி அமைந்து 3 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், மருத்துவர்களின் உழைப்பை மட்டும் நன்றாகப் பயன்படுத்திக் கொண்ட இந்தத் தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றம் 6 வாரத்திற்குள் மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிட்டும், எந்தவிதமான கோரிக்கையும் நிறைவேற்றாமல் இருப்பது மிகவும் வன்மையாகக் கண்டிக்கக் கூடியது. அது மட்டுமில்லாமல் கடந்த 28-ந்தேதி சட்டசபையில் சுகாதாரத்துறை மானிய கோரிக்கையின் போது அரசு மருத்துவர்களின் ஊதிய கோரிக்கை நிறைவேற்றும் அறிவிப்பை வெளியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்போடு இருந்த மருத்துவர்களுக்கு அரசு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனவே அரசாணை 354-ன் படி 12 ஆண்டுகளில் ஊதிய பட்டை நான்கு என்ற மருத்துவர்களின் நியாயமான கோரிக்கை வழங்கப்படும், என்ற இந்த மாபெரும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று முதலமைச்சரை தே.மு.தி.க. சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

மக்கள் உயிரைக் காப்பதில் கடவுளுக்கு அடுத்தபடியாக வாழும் தெய்வங்களாக நாம் கருதுவது மருத்துவர்களைத் தான் எனவே மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு உடனடியாக அவர்களுக்கு வேண்டிய, ஊதிய உயர்வை அளிக்க வேண்டும். மருத்துவர்கள் தினத்தில் மருத்துவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News