தமிழ்நாடு

தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகளை பறிப்பதா? ராமதாஸ் கண்டனம்

Published On 2024-07-27 09:28 GMT   |   Update On 2024-07-27 09:28 GMT
  • ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை குத்தகை முறையில் நியமிப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
  • தொழிலாளர் உரிமைக்கும், சமூகநீதிக்கும் முதல் எதிரி தி.மு.க. தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு 1200 ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை குத்தகை முறையில் நியமிப்பதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை தமிழக அரசு கோரியிருக்கிறது. தொழிலாளர்களின் உழைப்பை மதித்து, அதற்கேற்ற ஊதியத்தையும், சமூகப் பாதுகாப்பையும் வழங்க வேண்டிய தமிழக அரசே, அவர்களின் உழைப்பைச் சுரண்டி, சமூகநீதியை படுகொலை செய்வது கண்டிக்கத்தக்கது.

கடந்த ஆண்டு அக்டோபர் - நவம்பர் மாதங்களில் இதே மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு குத்தகை அடிப்படையில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை நியமிக்க ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களிலும் ஓட்டுநர், நடத்துனர் காலிப் பணியிடங்களை, நேரடித் தேர்வு மூலம் நிரப்ப வேண்டும்'' எனத் தீர்ப்பளித்தது.

அதன்பிறகும் திருந்தாத தமிழக அரசு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய மண்டலங்களில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை குத்தகை முறையில் நியமிப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

போராடிப் பெற்ற இரு உரிமைகளையும் தி.மு.க. அரசு, கொடூரமாக பறித்திருக்கிறது. இதை விட கொடிய சமூக அநீதியை எவரும் இழைக்க முடியாது. இதன் மூலம் தொழிலாளர் உரிமைக்கும், சமூகநீதிக்கும் முதல் எதிரி தி.மு.க. தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News