தமிழ்நாடு (Tamil Nadu)

10 தமிழக மீனவர்கள் மீது கொலை வழக்கு போடும் இலங்கை அரசின் சதியை முறியடித்து மீட்க வேண்டும்- ராமதாஸ்

Published On 2024-07-01 07:15 GMT   |   Update On 2024-07-01 07:15 GMT
  • தமிழக மீனவர்கள் போதை மருந்து கடத்தலில் ஈடுபடுகின்றனர், இலங்கை வீரர்களை கொலை செய்கின்றனர் என்பன போன்ற பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர்.
  • தமிழக மீனவர்களுக்கு உள்ள உரிமைகளைப் பறிக்க இலங்கை தொடர்ந்து சதி செய்து வருகிறது.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆனந்த் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள், கடலூர் மாவட்ட மீனவர் ஒருவர், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இரு மீனவர்கள் என மொத்தம் 10 பேர் கடந்த ஜூன் 23-ம் நாள் வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த சிங்களக் கடற்படையினர், தங்களின் சுற்றுக்காவல் படகை தமிழக மீனவர்களின் படகு மீது மோதியுள்ளனர்.

அதில் சுற்றுக்காவல் படகில் இருந்த ரத்னாயகா என்ற வீரர் கடலில் விழுந்து காயமடைந்தார். உடனடியாக அவர் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தமிழக மீனவர்கள் 10 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அடுத்த நாளே கடலில் விழுந்து மீட்கப்பட்ட கடற்படை வீரர் ரத்னாயகா உயிரிழந்து விட்டதால் தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசால் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இலங்கை கடற்படை வீரர் ரத்னாயகாவின் உயிரிழப்புக்கு தமிழக மீனவர்கள் எந்த வகையிலும் காரணம் அல்ல. அவர்கள் அப்பாவிகள். வங்கக்கடலில் பிழைப்புக்காக மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை கைது செய்யும் நோக்குடனும், தாக்கும் நோக்குடனும் அவர்களின் படகுகள் மீது இலங்கைக் கடற்படை வீரர்கள், தங்களின் ரோந்து படகுகளை அதிவேகமாக ஓட்டி வந்து மோதினார்கள்.

அதனால் ஏற்பட்ட நிலைகுலைவில் தான் இலங்கை கடற்படை வீரர் ரத்னாயகா முதுகுத் தண்டில் காயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவம் பயனின்றி உயிரிழந்தார். இது முழுக்க முழுக்க விபத்து. அதுவும் இலங்கைக் கடற்படையினரால் ஏற்படுத்தப்பட்ட விபத்து. அதற்கு எந்தத் தவறும் செய்யாத அப்பாவி தமிழக மீனவர்களை பொறுப்பாக்குவதும், தண்டிக்கத் துடிப்பதும் நியாயமல்ல.

இலங்கை கடற்படை வீரர் ரத்னாயகா கொலை வழக்கில் தமிழக மீனவர்களை தொடர்புப்படுத்தி இலங்கை வெளியுறவுத்துறை தெரிவித்த குற்றச்சாட்டுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும், கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரியும் என்ன பதில் கூறினார்கள்? என்பது தெரியவில்லை. வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் காலம் காலமாக மீன்பிடித்து வரும் பகுதிகளில் தொடர்ந்து மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உள்ள உரிமைகளைப் பறிக்க இலங்கை தொடர்ந்து சதி செய்து வருகிறது.

அதற்காக தமிழக மீனவர்கள் போதை மருந்து கடத்தலில் ஈடுபடுகின்றனர், இலங்கை வீரர்களை கொலை செய்கின்றனர் என்பன போன்ற பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர். அவற்றை மத்திய அரசு ஏற்கக் கூடாது. இன்னும் கேட்டால் இதுவரை 800-க்கும் கூடுதலான தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அதற்கு காரணமான சிங்கள வீரர்களை தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கும்படி தான் இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு அழுத்தம் கொடுத்து, தமிழக மீனவர்கள் 10 பேர் மீதான கொலை வழக்கை திரும்பப் பெறச் செய்யவும், அவர்களை விடுதலை செய்து தாயகத்திற்கு அழைத்து வரவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News