தமிழ்நாடு (Tamil Nadu)

50 அடியை நெருங்கிய வைகை அணை நீர்மட்டம்- விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2024-06-29 04:36 GMT   |   Update On 2024-06-29 04:36 GMT
  • கேரளாவில் பெய்துவரும் கனமழையால் தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.
  • அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 1946 மி.கனஅடியாக உள்ளது.

கூடலூர்:

கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் சீராக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 123.30 அடியாக உள்ளது. அணைக்கு 2469 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயம் பாசனம் உள்ளிட்ட தேவைக்களுக்காக 1200 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 3281 மி.கனஅடிநீர் இருப்பு உள்ளது.

இந்த தண்ணீர் பாசனத்திற்கு போக வைகை அணையை வந்து சேருகிறது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை மாவட்ட விவசாய பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் குறைந்தது. அதனை தொடர்ந்து போதிய அளவு மழை பெய்யாததால் அணையின் நீர்மட்டமும் உயராமல் இருந்தது.

தற்போது கேரளாவில் பெய்துவரும் கனமழையால் தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் லோயர் கேம்ப்பில் உள்ள மின்உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்களில் 108 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் வைகை அணைக்கு நீர்வரத்து 1113 கனஅடியாக அதிகரித்தது. இதனால் நீர்மட்டம் 49.64 அடியாக உயர்ந்துள்ளது. விரைவில் 50 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 1946 மி.கனஅடியாக உள்ளது.

கடந்த 4 நாட்களில் அணையின் நீர்மட்டம் 4 அடிவரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை தொடர்ந்து கை கொடுத்தால் இந்த வருடமும் பாசனத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என அவர்கள் நம்பிக்கையுடன் விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர்.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியில் நீடித்து வருகிறது. அணைக்கு வரும் 30 கனஅடிநீர் அப்படியே திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 122.24 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 10.2, தேக்கடி 6.4 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News