தமிழ்நாடு (Tamil Nadu)

தேனி அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

Published On 2024-07-24 05:45 GMT   |   Update On 2024-07-24 05:45 GMT
  • நாளை தென்காசி, ஈரோடு ஆகிய தொகுதி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தப்படுகிறது.
  • தேர்தல் வியூகங்களை இப்போதே தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகள் வாரியாக கடந்த 10-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை முதல்கட்ட கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இதுவரையில் 7 நாட்கள் நடந்த கலந்துரையாடலில் 23 தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.

கூட்டணி குறித்து சரியான முடிவு எடுக்காதது தேர்தல் தோல்விக்கு காரணம் என்று பெரும்பாலான நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் 2026 சட்டசபை தேர்தலை சந்திக்க சரியான திட்டமிடல், தேர்தல் வியூகங்களை இப்போதே தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.


இந்த நிலையில் 2-வது கட்ட கலந்துரையாடல் இன்று தொடங்கியது. மீத முள்ள 17 பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகளை இன்று முதல் ஆகஸ்ட் 5-ந் தேதி வரை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

காலையில் தேனி பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி கருத்துக்களை கேட்டறிந்தார். சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், இந்நாள், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர். அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்கும் தேனி தொகுதி தோல்விக்கு என்ன காரணம் என்பது பற்றி விவாதித்தார்.

முன்னதாக ஆலோசனை நடத்துவதற்காக தலைமை கழகத்திற்கு காலை 10.15 மணிக்கு எடப்பாடி பழனிசாமி வந்தார். அவரை தொண்டர்கள் வரவேற்று உள்ளே அழைத்து சென்ற னர். மாலை 4 மணிக்கு ஆரணி தொகுதி நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.

நாளை தென்காசி, ஈரோடு ஆகிய தொகுதி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தப்படுகிறது.

Tags:    

Similar News