தமிழ்நாடு (Tamil Nadu)

திருமாவளவன் பேனர் கிழிக்கப்பட்டதால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்

Published On 2024-08-17 04:47 GMT   |   Update On 2024-08-17 04:47 GMT
  • பிறந்தநாள் கொண்டாட்டம் டிஜிட்டல் பேனர் வைக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
  • பேனரை கிழித்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு வைக்கப்பட்ட பேனர் மர்ம நபர்களால் கிழிக்கப்பட்டதால், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் 62-வது பிறந்த நாளையொட்டி இன்று தமிழகம் முழுவதும் அவரது கட்சி தொண்டர்களால் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள சாமியாபுரம் கூட்ரோடு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பல்வேறு நல திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியும், பிறந்தநாள் கொண்டாட்டம் டிஜிட்டல் பேனர் வைக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதையொட்டி கூட்ரோடு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் சார்பில் பெரிய அளவிலான டிஜிட்டல் பேனர்கள் நெடுஞ்சாலையோரம் தொண்டர்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த பேனர்களை நள்ளிரவில் மர்ம நபர்கள் கிழித்து விட்டுச் சென்றுள்ளனர். இன்று அதிகாலை 5 மணிக்கு பேனர் கிழிக்கப்பட்டது குறித்து தகவல் அறிந்த கட்சி தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 20-க்கு மேற்பட்டவர்கள் சேலம்-அரூர் சாலையில் திரண்டு வந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேனர் கிழித்தவர்கள் மீது போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர். இந்த போராட்டம் சுமார் ½ மணி நேரம் நடைபெற்றது.

இதுகுறித்து தகவல் அறிந்த பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்சவள்ளி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேனரை கிழித்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

இதைத்தொடர்ந்து கட்சி தொண்டர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் அந்த பகுதியில் போலீசார் கண்காணித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்று அதிகாலை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் பிறந்த நாள் பேனர் கிழிக்கப்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News