வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் வரத்து குறைந்த வெளிநாட்டு பறவைகள்- சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
- கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வறட்சியின் காரணமாக குளம் மற்றும் மரங்கள் வரண்டு போனது.
- அயல் நாடுகளில் இருந்து கூட்டம் கூட்டமாக பறவைகள் வருவதும் அதனை பார்க்க பொது மக்கள் ஆர்வம் காட்டி வந்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகே அமைந்துள்ளது வெள்ளோடு பறவைகள் சரணாலயம். சுமார் 240 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த பறவைகள் சரணாலயத்தில் 50 ஏக்கர் அளவில் 30 அடிக்கு தண்ணீர் தேக்கும் வகையில் குளம் அமைக்கபட்டுள்ளது.
கீழ்பவானி வாய்க்காலின் கசிவு நீர் மற்றும் மழை காலத்தில் நீர் வழி ஓடையின் மூலமாக வரும் தண்ணீரையே ஆதாரமாக கொண்டுள்ளது இந்த பறவைகள் சரணாலயம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வறட்சியின் காரணமாக குளம் மற்றும் மரங்கள் வரண்டு போனது.
இதனையடுத்து ரூ.2 கோடியே 35 லட்சம் மதிப்பில் பறவைகள் சரணாலயம் புதுப்பிக்கபட்டு சரணாலயத்தை சுற்றி கரைகள் பலப்படுத்தப்பட்டு சிறு பாலங்கள், நடை பாதைகள், பறவைகளின் வண்ண ஓவியங்கள், பட்டாம்பூச்சி பூங்கா, செல்பி பாயின்ட் என பல்வேறு மேம்பாட்டு பணிகள் முடிவுற்று எழில்மிகு ரம்மியமாக காட்சியளிக்கின்றது வெள்ளோடு பறவைகள் சரணாலயம்.
இந்த சரணாயத்தில் உள்ள குளத்தில் உள்ள மீன்களை உண்டு இனப்பெருக்கம் செய்ய பறவைகள் அதிகம் வருவதுண்டு. ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரையில் பறவைகளுக்காக சீசன் தொடங்கும்.
இந்த காலத்தில உள்நாட்டு பறவைகளான மஞ்சள் மூக்கு நாரை, நத்தை குத்தி நாரை, வெள்ளை அரிவால் மூக்கன், பொறி உள்ளான், நீலவால் இரைக்கோழி, சிறிய நீர் காகம், சாம்பல் நாரை, பஞ்சுருட்டான் போன்ற உள்நாட்டு பறவைகளும் சைபீரியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்து சுழைக்கடா, வண்ண நாரை, நெடுங்கல் உள்ளான், செம்பருந்துபூ நாரை, வால் காக்கை, காஸ்பியன் ஆலா, வெண்புருவ சின்னான், கருங்கழுத்து நாரை போன்ற வெளிநாட்டு பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து இந்த சரணாலய குளத்தில் குளித்து கும்மாலமிட்டு மீன்களை உணவாக உண்டு மரங்களில் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்து குஞ்சுகள் வளர்ந்தவுடன் பறந்து சென்று விடுவது வழக்கமான ஒன்றாக உள்ளது.
இந்த பறவைகளைகான ஈரோடு மாவட்டம் மட்டு மின்றி அருகிலுள்ள கோவை, சேலம், திருச்செங்கோடு என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் வருவது உண்டு. ஈரோடு மாவட்ட த்தின் சிறந்த சுற்றுலா தளமாக வெள்ளோடு பறவைகள் சரணாலயம் திகழ்ந்து வந்தது. அயல் நாடுகளில் இருந்து கூட்டம் கூட்டமாக பறவைகள் வருவதும் அதனை பார்க்க பொது மக்கள் ஆர்வம் காட்டி வந்தனர்.
இந்நிலையில ஈரோடு மாவட்டத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து நாட்டிலேயே 2-வது இடத்தை ஈரோடு மாவட்டம் பிடித்தது. 110 டிகிரி பாரன் ஹிட் அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. பகல் நேரங்களில் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது.
தற்போது வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் மேம்படுத்தப்பட்ட பணிகள் நிறைவடைந்து சரணாலயம் ரம்யமாக காட்சி அளித்தாலும். வெயிலின் தாக்கம் காரணமாக வெளிநாட்டு பறவைகள் வரத்து இல்லை. பறவைகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. ஒரு சில உள்நாட்டு பறவைகள் மட்டுமே வந்து செல்கின்றன.
இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.