ராமர் பாலம் தொடங்கிய இடத்தில் பிரதமர் மோடி நாளை சிவ பூஜை
- அரிச்சல்முனை பகுதி ராமாயணத்துடன் நெருங்கிய தொடர்புடைய பகுதியாக கருதப்படுகிறது.
- பிரதமரின் வருகையொட்டி 7 ஆயிரம் போலீசார் தீவிர கண்காணிப்பு.
ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தனுஷ் கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதி. சாலையின் இருபுறமும் கடல் சூழ காட்சி தரும் தனுஷ்கோடி உலகில் உள்ள சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ராமேஸ்வரம் வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் தனுஷ்கோடி செல்லாமல் ஊர் திரும்புவதில்லை.
தனுஷ்கோடிக்கு எளிதாக சென்று வரும் வகையில் முகுந்தராயர் சத்திரத்தில் இருந்து அரிச்சல்முனை வரை புதிதாக சாலை அமைக்கப்பட்டு கடந்த 2017-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த அரிச்சல்முனை பகுதி ராமாயணத்துடன் நெருங்கிய தொடர்புடைய பகுதியாக கருதப்படுகிறது.
அதாவது, இலங்கையை ஆண்ட ராவணன் சீதா தேவியை சிறைபிடித்து சென்றபோது, அவரை மீட்க ராமர் முதலில் தனுஷ்கோடி வந்தார். முன்னதாக திருப்புல்லாணி ஆதிஜெகநாதரிடம் வில், அம்பு பெற்றார் என்றும் பின்னர் அரிச்சல்முனையில் இருந்து பாலம் அமைத்து இலங்கை சென்றார் என்றும் ராமாயண காவியம் கூறுகிறது.
மேலும், அந்த பகுதியில் ராமர் மணலால் சிவனை உருவாக்கி வழிபட்டார். அதேபோல் ராவணனை கொன்று சீதையை மீட்டு வந்த பின்னர் இதே அரிச்சல்முனையில் பிரம்மஹத்தி தோஷம் நீங்க சிவலிங்க பூஜை நடத்தியுள்ளார்.
எனவே இங்கு வரும் பக்தர்கள் கடலில் இறங்கி புனித நீரை தெளித்து செல்வது வழக்கம். அந்த வகையில் ராமேஸ்வரம் வருகை தரும் பிரதமர் மோடி நாளை காலை தான் தங்கியிருக்கும் ஸ்ரீராம கிருஷ்ண மடத்தில் இருந்து சாலை மார்க்கமாக அரிச்சல் முனை செல்கிறார்.
அங்கு கடலின் அழகை ரசிப்பதோடு, கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிவ லிங்க பூஜையில் கலந்து கொள்கிறார்.
பின்னர், அங்கிருந்து தனுஷ்கோடி வரும் வழியில் அமைந்துள்ள கோதண்ட ராமர் கோவிலுக்கு செல்கிறார். இலங்கையை ஆண்ட ராவணின் தம்பியான விபீஷணன் ராமபிரான் மீது கொண்ட பற்று காரணமாக அண்ணனுக்கு எதிராக போரிட்டார்.
இறுதியில் ராவணன் இறக்கவே அவரது தம்பியான விபீஷணனை ராமர் இலங்கை அரசனாக பட்டாபிஷேகம் செய்து வைத்தார். அது நடந்த இடம் இந்த கோதண்டராமர் கோவில் என்பதால் ராமாயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்த கோவிலில் பிரதமர் மோடி சங்கல்பம் செய்து சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு நடத்துகிறார்.
பிரதமர் கடற்கரை பகுதிக்கு வருவதையொட்டி இந்திய கடலோர காவல் படை, கடற்படையினர் உள்பட 7 ஆயிரம் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.