செய்திகள் (Tamil News)

இந்தியாவில் இருமடங்கு விற்பனை: இரண்டு ஆப்பிள் சாதனங்கள் அசத்தல்

Published On 2018-02-02 09:24 GMT   |   Update On 2018-02-02 09:24 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் 2018 முதல் காலாண்டு வருவாய் கூட்டத்தில் ஆப்பிள் சாதனங்களின் இந்திய விற்பனை குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளது.
சான்ஃபிரான்சிஸ்கோ:

ஆப்பிள் நிறுவனத்தின் 2018 முதல் காலாண்டு வருவாய் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக், ஆப்பிள் தலைமை நிதி பிரிவு தலைவர் லூகா மேஸ்ட்ரி பங்கேற்ற கூட்டத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய வருவாய் மற்றும் இங்கு வளர்ச்சியை சந்தித்த ஆப்பிள் சாதனங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டன. 

அதன்படி இந்தியாவில் மேக் சாதனங்களின் விற்பனை மற்ற நாடுகளை விட பிரதானமாக இருந்ததாக மேஸ்ட்ரி தெரிவித்துள்ளார். டிசம்பர் மாத காலாண்டு வரை சுமார் 51 லட்சம் மேக் சாதனங்கள் விற்பனை செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்தியா, லத்தின் அமெரிக்கா, துருக்கி, மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பியா போன்ற சந்தைகளில் முந்தைய ஆண்டை விட 13% மேக் சாதனங்களின் விற்பனை அதிகமாக இருந்துள்ளது. 

சர்வதேச சந்தையில் மேக் சாதனங்களின் விற்பனை இருமடங்கு அதிகரித்து இருப்பது ஆப்பிள் வரலாற்றில் புதிய சாதனை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். மேக் சாதனங்களை தொடர்ந்து ஐபேட் விற்பனை இந்தியாவில் அதிகரித்து இருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாத காலாண்டை விட ஐபேட் விற்பனை இந்த ஆண்டு 8% வளர்ச்சியடைந்திருக்கிறது.  



மேக் போன்றே ஐபேட் விற்பனையும் இந்தியா, லத்தின் அமெரிக்கா, துருக்கி, மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பியா போன்ற சந்தைகளிலும், வளர்ந்த சந்தைகளான ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் கொரியாவில் இருமடங்கு அதிகரித்து இருக்கிறது. ஆப்பிள் வருவாய் உயர்ந்திருப்பதற்கு இந்தியா மிக முக்கிய பங்கு வகித்திருப்பதாக மேஸ்ட்ரி தெரிவித்திருக்கிறார். 

கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவன வருவாயை விட இந்த ஆண்டு 13% அதிகரித்து இருக்கிறது. ஆப்பிள் வருவாய் அந்நிறுவன வரலாற்றில் முதல் முறையாக 8830 கோடி அமெரிக்க டாலர்களை எட்டியிருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய சாதனமாக இருக்கும் ஐபோன் விற்பனை 7.73 கோடிகளை கடந்திருக்கிறது. 

Similar News