செய்திகள் (Tamil News)
கோப்பு படம்

போலி செய்திகளை முடக்க வாட்ஸ்அப் புது திட்டம்

Published On 2018-07-20 08:25 GMT   |   Update On 2018-07-20 08:25 GMT
வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகளை முடக்க புதிய அம்சங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு இருக்கிறது. இது குறித்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். #WhatsApp



வாட்ஸ்அப் தலைமை அலுவலகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் இந்திய நிர்வாக அதிகாரிகள் மத்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதில் தேர்தல் சமயங்களில் வாட்ஸ்அப் தளத்தை தவறாக பயன்படுத்துவதை எதிர்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. 

இந்தியாவில் வரவிருக்கும் தேர்தல் காலத்தில் போலி குறுந்தகவல்களை எதிர்கொள்ளும் வகையில் புதிய வசதிகளை வழங்குவது குறித்த பணிகளில் ஈடுபட இருப்பதாக வாட்ஸ்அப் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த வசதிகள் தேர்தல் துவங்குவதற்கு சரியாக 48 மணி நேரத்திற்கு முன் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சமீபத்தில் மெக்சிகோவில் நடைபெற்ற போலி செய்திகளை சரிபார்க்கும் வழிமுறையை இந்திய பொது தேர்தலிலும் வாட்ஸ்அப் கொண்டு வருகிறது. 

இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை நிறைவுற்று இருப்பதாகவும். இதில் வாட்ஸ்அப் நிறுவன ஆராய்ச்சியாளர்கள், பொது கொள்கை மற்றும் வியாபார வளர்ச்சி துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.


கோப்பு படம்

மேலும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இந்த வழிமுறையை நடைமுறைப்படுத்த ரகசியம் காக்கவும், செயல்பட துவங்கியதும் அதிக எச்சரிக்கையாக செயல்பட ஒப்பு கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 2018 ஆண்டு இறுதியில் பின்பற்றப்படும் வழிமுறைகளை 2019-ம் ஆண்டு பொது தேர்தல் காலத்தில் மேலும் அதிகப்படுத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது.

வாட்ஸ்அப் இந்திய குழு இந்திய வங்கிகளை சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்திய வங்கிகளுடன இணைந்து வாட்ஸ்அப் சேவையில் பண பரிமாற்றம் செய்யும் வசதி வழங்க வேண்டியிருப்பதால், இந்த சந்திப்பு நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

பிப்ரவரி 2018 வரை வாட்ஸ்அப் சேவையை சுமார் 20 கோடி பேர் பயன்படுத்தி வரும் நிலையில், இந்தியா வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மிக முக்கிய சந்தையாக விளங்குகிறது. மெக்சிகோ தேர்தல்களில் வாட்ஸ்அப் பயன்படுத்திய வெரிஃபிகாடோ மாடல் (சரிபார்க்கும் வழிமுறை) இந்தியாவில் கொண்டு வர வாட்ஸ்அப் திட்டமிடுவதாக கூறப்படுகிறது.

வாட்ஸ்ப் செயலியில் போலி தகவல்கள் மற்றும் சந்தேத்திற்கிடமான பயனர்களை கண்டறிய மெஷின் லேர்னிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது. சமூக வலைத்தள பயன்பாடு தேர்தல் பிரச்சாரத்திற்கு தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க 2014 ஜனவரியில் 14 பேர் கொண்ட குழுவை நியமித்தது. #WhatsApp
Tags:    

Similar News