செய்திகள்

தமிழ் மொழி வசதியுடன் ஜியோ பிரவுசர் வெளியானது

Published On 2019-01-08 05:45 GMT   |   Update On 2019-01-08 05:45 GMT
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் தமிழ் மொழி வசதியுடன் புதிய மொபைல் பிரவுசரை அறிமுகம் செய்துள்ளது. #Jio #browser



ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ புதிய பிரவுசர் செயலியை அறிமுகம் செய்துள்ளது. ஜியோ பிரவுசர் என அழைக்கப்படும் புதிய செயலி இந்தியாவின் முதல் பிரவுசர் என்றும், இது இந்திய பயனர்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது என ஜியோ தெரிவித்துள்ளது.

குறைந்த மெமரியில் வேகமாகவும், மிக எளிமையாகவும் பயன்படுத்தக்கூடியதாக ஜியோ பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளதால், மலிவு விலை சாதனங்களிலும் இதனை எவ்வித இடையூறும் இன்றி பயன்படுத்தலாம். கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் புதிய செயலியை பயனர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

ஜியோ பிரவுசர் செயலியில் பயனர்கள் புத்தம் புதிய வீடியோக்கள் மற்றும் செய்திகளை வாசிக்க முடியும். தற்சமயம் தமிழ், இந்தி, குஜராத்தி, மராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடா மற்றும் பெங்காலி என அதிகபட்சம் எட்டு மொழிகளில் ஜியோ பிரவுசரை பயன்படுத்தலாம். பயனர்கள் அவரவர் விரும்பும் மொழியை தேர்வு செய்து, அந்த தலைப்பில் செய்திகளை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளலாம்.



பிரவுசரில் பிரத்யேகமாக செய்திகள் மற்றும் வீடியோக்களுக்கான பக்கம் வழங்கப்பட்டுள்ளது. இங்கு ஃபாஸ்பைட்ஸ் வழங்கும் தரவுகள் வாடிக்கையாளர்களுக்கு பட்டியலிடப்படும். வேகமான பிரவுசிங் அனுபவம் வழங்கும் நோக்கில் ஜியோ பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளதாக செயலிக்கான விவரக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற அம்சங்களை பொருத்த வரை இணையத்தின் முன்னணி வலைத்தளங்களை விரைவில் இயக்க க்விக் அக்சஸ் எனும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பிரைவேட் பிரவுசிங் அனுபவத்தை வழங்கும் இன்காக்னிட்டோ மோட், செய்திகள் மற்றும் வீடியோக்களை நண்பர்கள், குடும்பத்தாருடன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.



பயனர்கள் டவுன்லோடு செய்த தரவுகளை இயக்கும் வசதி மற்றும் அவர்கள் ஏற்கனவே பயன்படுத்திய வலைத்தளங்களின் விவரங்கள் வழங்கப்படுகிறது. செயலியை மேம்படுத்தும் வகையில் வாடிக்கையாளர்கள் பரிந்துரைகள் மற்றும் விமர்சனங்களை தெரிவிக்க ரிலையன்ஸ் ஜியோ கேட்டுக் கொண்டுள்ளது.

தற்சமயம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டும் கிடைக்கும் ஜியோ பிரவுசர் செயலி ஆப்பிளின் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் வெளியாவது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
Tags:    

Similar News