செய்திகள்

அமெரிக்கா ஸ்பெல்லிங் பீ போட்டியில் பட்டம் வென்ற இந்திய வம்சாவளி சிறுவன்

Published On 2018-06-01 10:38 GMT   |   Update On 2018-06-01 10:38 GMT
அமெரிக்காவில் நடைபெற்ற சிக்கலான ஆங்கில எழுத்துகளை வாசிக்கும் ஸ்பெல்லிங் பீ போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கார்த்திக் நெம்மானி தேசிய விருது வென்றுள்ளார். #SpellingBee
நியூயார்க்:

அமெரிக்காவில், ஆங்கில வார்த்தைகளுக்கான சரியான, 'ஸ்பெல்லிங்' சொல்லும், 'தேசிய ஸ்பெல்லிங் பீ' போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடப்பது வழக்கம். இந்த போட்டிகளில், உலக நாடுகளை சேர்ந்த, நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமியர்கள் பங்கேற்பர். அவர்களில், மிகச் சிறந்த போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இறுதிச் சுற்றுப் போட்டிக்கு அனுமதிக்கப்படுவர்.

இதுவரை நடந்த போட்டிகளில், தொடர்ந்து, 11 ஆண்டுகளாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த போட்டியாளர்களே வெற்றி பெற்று வந்துள்ளனர். கடந்த ஆண்டு இந்திய வம்சாவளியை சேர்ந்த அனன்யா வினய் என்ற மாணவி இந்த பட்டத்தை வென்றிருந்தார்.

இந்நிலையில், அமெரிக்காவின் மேரிலாண்ட் பகுதியில் நடைபெற்ற இந்த ஆண்டிற்கான 91-வது 'தேசிய ஸ்பெல்லிங் பீ' போட்டியில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 516 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

அவர்களில் சிறந்த போட்டியாளர்கள் 41 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு 16 பேர் மட்டும் இறுதிச்சுற்று போட்டிக்கு நுழைந்தனர்.  9 சிறுமிகள் மற்றும் 7 சிறுவர்கள் என இறுதிப் போட்டியில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் 11 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்கள்.  

இதில் கடைசியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கார்த்திக் நெம்மானி மற்றும் நயாசா மோடி இடையே கடும் போட்டி நிலவியது. இருவருக்கும் இடையில் 20 வார்த்தைகள் தொடர்பான ஆங்கில ஸ்பெல்லிங் போட்டியில் இவர்கள் இருவருக்கும் இடையில் இழுபறி நீடித்தது.

இறுதியாக, "koinonia" என்ற சொல்லுக்கான எழுத்துகளை மிகச்சரியாக உச்சரித்து, டெக்சாஸ் மாநிலத்தை சேர்ந்த கார்த்திக் நெம்மானி 'தேசிய ஸ்பெல்லிங் பீ' பட்டத்தை தட்டிச் சென்றார்.

இதையடுத்து, 14 வயது சிறுவனான கார்த்திக் நெம்மானிக்கு பரிசுக்கான சுழல்கேடயத்துடன் 40 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசளிக்கப்பட்டது. மேலும், மெர்ரியம் - வெப்ஸ்ட்டர் சுற்றுலா நிறுவனத்தின் சார்பாக நியூயார்க், ஹாலிவுட் நகரங்களுக்கான சுற்றுலா பேக்கேஜ் மற்றும் 2500 அமெரிக்க டாலர்களும், கார்த்திக் பயிலும் பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கு பிட்ஸா விருந்தும் அளிக்கப்பட்டது. #SpellingBee
Tags:    

Similar News