செய்திகள்

ஜப்பானில் நில நடுக்கத்துக்கு 2 பேர் பலி - 40 பேர் மாயம்

Published On 2018-09-06 08:22 GMT   |   Update On 2018-09-06 08:22 GMT
ஜப்பானில் கொக்கைடோ மலைப்பகுதி தீவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவால் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 40 பேரை காணவில்லை. #earthquakejapan
டோக்கியோ:

ஜப்பானில் கொக்கைடோ என்ற தீவு உள்ளது. அங்கு இன்று அதிகாலை 3 மணிக்கு திடீரென பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள அத்சுமா நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி மலைகளை கொண்டதாகும்.

அதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதிலும் பல வீடுகள் இடிந்து விழுந்தன. நிலநடுக்கம் மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். 40 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.


140 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு தற்போது 4 ஆயிரம் ராணுவத்தினர் மற்றும் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 20 ஆயிரம் பேரை அனுப்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நில நடுக்கத்தின் அளவு 6.7 ரிக்டர் ஸ்கேல் ஆக பதிவாகி இருக்கிறது. இதன் தாக்கம் அதிகமாக இருந்தாலும் ஜப்பானில் நில நடுக்கத்தால் அதிக பாதிப்பு இல்லாத வகையிலான வீடுகளே அதிகம் கட்டப்படுகிறது. இதனால் உயிரிழப்புகள் அதிகம் இல்லை.

நிலநடுக்கம் மின் இணைப்புகளையும் கடுமையாக பாதித்தது. இதனால் அந்த தீவில் உள்ள 30 லட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகளும் பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளன. #earthquakejapan
Tags:    

Similar News