உலகம் (World)

உலக பணக்கார பட்டியலில் இடம்பிடித்துள்ள இந்திய பெண்மணி யார் தெரியுமா?

Published On 2024-05-30 04:28 GMT   |   Update On 2024-05-30 04:28 GMT
  • அமெரிக்காவின் போர்ப்ஸ் நிறுவனம் உலகின் டாப் 10 பெண் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது.
  • 4-வது ஆண்டாக உலகின் பணக்கார பெண்மணி என்ற பட்டத்தை மேயர்ஸ் பெற்றுள்ளார்.

வாஷிங்டன்:

அமெரிக்காவின் போர்ப்ஸ் நிறுவனம் உலகின் டாப் 10 பெண் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது. உலகளவில் உள்ள 2,781 பில்லியனர்களில் 2024-ம் ஆண்டில் மொத்த பில்லியனர் எண்ணிக்கையில் 13.3 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். இது முந்தைய ஆண்டில் 12.8 சதவீதமாக இருந்தது.

இந்தப் பட்டியலில் தொடர்ந்து 4-வது ஆண்டாக உலகின் பணக்கார பெண்மணி என்ற பட்டத்தை பிரான்சுவா பெட்டன்கோர்ட் மேயர்ஸ் பெற்றுள்ளார். இவர் லாரியல் நிறுவனரின் பேத்தி ஆவார். இவரது சொத்து மதிப்பு 98.2 பில்லியன் டாலராகும். அவரின் சொத்து லாரியல் குழுமத்தின் கிட்டத்தட்ட 35 சதவீத பங்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

அவரை தொடர்ந்து, 2-வது இடத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆலிஸ் வால்டன் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 77.2 பில்லியன் டாலராகும்.

இந்தப் பட்டியலில் 3-வது இடத்தில் ஜூலியா கோச் 66.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உள்ளார். கோச் இண்டஸ்ட்ரீசில் 42 சதவீத பங்குகளைப் பெற்ற அவர் எண்ணெய் சுத்திகரிப்பு, மருத்துவத் தொழில்நுட்பம் உள்பட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

தனியார் நிறுவனமான மார்ஸ் இன்க்கின் வாரிசான ஜாக்குலின் மார்ஸ் 39.4 பில்லியன் டாலர் மதிப்புடன் 4-வது இடத்தில் உள்ளார்.

மார்ஸ் இன்க் உலகின் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களில் ஒன்றாகும்.

இந்தியாவின் பணக்காரப் பெண்மணியான சாவித்ரி ஜிண்டால் 38 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்த பட்டியலில் 5-வது இடம்பிடித்துள்ளார். ஜிண்டால் குழுமம் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய வணிக நிறுவனங்களில் ஒன்றாகும். இதன் வருவாய் 15 பில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது.

6-வது இடத்தில் ரஃபேலா அபோன்டே-டயமண்டும், 7வது இடத்தில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸின் முன்னாள் மனைவியான மெக்கென்சி ஸ்காட்டும், 8-வது இடத்தில் ஜினா ரைன்ஹார்ட்டும், 9-வது இடத்தில் அபிகாயில் ஜான்சனும், 10-வது இடத்தில் மிரியம் அடெல்சனும் உள்ளனர்.

Tags:    

Similar News