உலகம் (World)

இருளில் வாழும் மக்களுக்கு ஒளி வழங்கும் உயர்ந்த உள்ளம்

Published On 2024-02-04 08:02 GMT   |   Update On 2024-02-04 08:02 GMT
  • உக்ரைனின் பல பகுதிகளில் மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்
  • பாதிரியார் டுப்மேனுக்கு பல ஊர்களில் இருந்து ஆதரவு பெருகி வருகிறது

கடந்த 2022 பிப்ரவரி மாதம், உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில் ஆக்கிரமித்தது. இதை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ராணுவ உதவியுடன் போரிட்டு வருகிறது.

இரு தரப்பிலும் உயிர்சேதங்களும், கட்டிட சேதங்களும் பலமாக ஏற்பட்டிருந்தும், போர் தீவிரமாக 710 நாட்களை கடந்து தொடர்கிறது.

ரஷியாவின் வான்வழி தாக்குதலால் உக்ரைன் நாட்டில் சுமார் 40 சதவீத மின் உற்பத்தி நிலையங்கள் சேதமடைந்தன. இதனால் உக்ரைனின் பல பகுதிகளில் மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்

உதவிகள் கேட்டு அமெரிக்க அதிபரை சந்தித்த உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, தங்கள் நாட்டு மின்சார உற்பத்தி நிலையங்களை இயங்க செய்யவும் அமெரிக்க உதவியை கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரத்தில் இருந்து சிறிது தொலைவில் உள்ளது சாஸ்டன் (Sawston) கிராமம்.

சாஸ்டன் பகுதியில் உள்ள செயின்ட் மேரி தேவாலயத்தில் பாதிரியாராக இருப்பவர், 29 வயதான வில் லயான் டுப்மேன் (Will Lyon Tupman).

உக்ரைன் மக்கள் இருளில் அவதிப்படுவதை கேள்விப்பட்டு 2022லிருந்தே பாதிரியார் டுப்மேன், பாதி உபயோகப்படுத்தப்பட்ட நிலையில் உள்ள மெழுகுவர்த்திகளை சேகரிக்க தொடங்கினார்.

தங்கள் தேவாலயத்திலும் இருந்த பயன்படுத்தப்படாத மெழுகுவர்த்திகளையும் தனது சேகரிப்பில் இணைத்தார். மேலும், இவரது கோரிக்கைக்கு உதவ பலர் முன் வந்ததால், தங்கள் வீட்டில் இருந்த பாதி எரிந்த நிலையில் உள்ள மற்றும் உபயோகப்படுத்தாத மெழுகுவர்த்திகளையும் அவரிடம் வழங்கினர்.


இவையனைத்தையும் பாதிரியார் டுப்மேன், அங்குள்ள ஒரு மெழுகுவர்த்தி உற்பத்தி நிலையத்தில் கொடுத்து, உருக்கி, புது மெழுகுவர்த்திகளாக மாற்றினார். அந்த புது மெழுகுவர்த்திகளை உக்ரைன் நாட்டிற்கு அனுப்பி வைத்தார்.

இந்த அரிய பணியை, பாதிரியார் டுப்மேன் தற்போது வரை தொடர்கிறார். இவரது முயற்சிக்கு அப்பகுதி மக்களிடம் இருந்தும், சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள சர்ச்களிலில் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.

உக்ரைன் மக்கள் டுப்மேனின் இந்த பெரும் உதவியினால் பயனடைந்துள்ளதால், அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News