உலகம் (World)

டொமினிக் ராப்

இங்கிலாந்து துணை பிரதமர் டொமினிக் ராப் ராஜினாமா

Published On 2023-04-21 10:57 GMT   |   Update On 2023-04-21 10:57 GMT
  • இங்கிலாந்து துணை பிரதமர் டொமினிக் ராப் ராஜினாமா செய்தார்.
  • ரிஷி சுனக் அமைச்சரவையில் இருந்து விலகும் 3-வது நபர் டொமினிக் ராப் ஆவார்.

லண்டன்:

இங்கிலாந்தின் துணை பிரதமரும், நீதித்துறை மந்திரியுமான டொமினிக் ராப் தனது துறை சார்ந்த அதிகாரிகளிடம் மரியாதைக் குறைவாகவும், கொடுமைப்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்த மூத்த வழக்கறிஞர் ஆடம் டாலி என்பவரை கடந்த நவம்பரில் பிரதமர் ரிஷி சுனக் நியமித்தார். இந்த விசாரணையின் அறிக்கையை பிரதமரிடம் கடந்த வியாழக்கிழமை ஆடம் டாலி சமர்ப்பித்தார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்கள் வெளியாகவில்லை.

இந்நிலையில், துணை பிரதமர் டொமினிக் ராப் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, டொமினிக் ராப் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், விசாரணையில் ஏதேனும் கொடுமைப்படுத்துதல் கண்டறியப்பட்டால் ராஜினாமா செய்வதாக உறுதியளித்திருந்தேன். என் சொல்லைக் காப்பாற்றுவது முக்கியம் என்று நான் நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

இங்கிலாந்தின் பிரதமராக ரிஷி சுனக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பதவியேற்ற பிறகு, அவரது அமைச்சரவையில் இருந்து விலகிய 3-வது முக்கிய நபர் டொமினிக் ராப் ஆவார்.

Tags:    

Similar News