செய்திகள் (Tamil News)

டாப் 4 பேட்ஸ்மேன்கள் அதிரடியால் ஆஸ்திரேலியாவுக்கு 353 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்தியா

Published On 2019-06-09 13:24 GMT   |   Update On 2019-06-09 13:24 GMT
தவான் சதமடிக்க விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா அரைசதம் விளாச ஆஸ்திரேலியாவுக்கு 353 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.
இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் உலகக்கோப்பையின் 14-வது லீக் ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி தொடக்க வீரர்களாக களம் இறங்கிய தவான் மற்றும் ரோகித் சர்மா தொடக்கத்தில் ஸ்டார்க் மற்றும் பேட் கம்மின்ஸ் பந்துகளை நிதானமாக எதிர்கொண்டனர். அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 11.3 ஓவரில் 50 ரன்னைத் தொட்ட இந்தியா, 19 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. தவான் சிறப்பாக விளையாடி 53 பந்தில் 7 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார்.



அவரைத் தொடர்ந்து ரோகித் சர்மா 61 பந்தில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார். இந்தியா 20 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 110 ரன்கள் சேர்த்தது. இந்த ஜோடி 22.3 ஓவரில் 127 ரன்கள் எடுத்திருந்தபோது பிரிந்தது. ரோகித் சர்மா 70 பந்தில் 57 ரன்கள் (3 பவுண்டரி, 1 சிக்ஸ்) எடுத்த நிலையில் நாதன் கவுல்டர் நைல் பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து தவான் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் சிறப்பாக விளையாடியது. தவான் 95 பந்தில் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 109 பந்தில் 117 ரன்கள் (16 பவுண்டரி) குவித்து ஆட்டமிழந்தார். தவான் ஆட்டமிழக்கும்போது இந்தியா 37 ஓவரில் 220 ரன்கள் சேர்த்திருந்தது.

ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்ததால், 4-வது வீரராக ஹர்திக் பாண்டியா களம் இறக்கபட்டார். அவர் அதிரடியாக விளையாடி 27 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 48 ரன்கள் குவித்தார். இதற்கிடையே விராட் கோலி 55 பந்தில் 3 பவுண்டரியுடன் தனது 50-வது அரைசதத்தை பதிவு செய்தார்.

கோலி, ஹர்திக் பாண்டியா ஆட்டத்தால் இந்தியா 45.4 ஓவரில் 300 ரன்னைக் கடந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா உலகக்கோப்பையில் முதன்முறையாக 300 ரன்னைக் கடந்து சாதனைப் படைத்தது. பாண்டியா ஆட்டமிழந்ததும் எம்எஸ் டோனி களமிறங்கினார்.



டோனி அதிரடியாக விளையாடி 14 பந்தில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 27 ரன்கள் விளாசினார். விராட் கோலி 77 பந்தில் 82 ரன்கள் சேர்த்து கடைசி பந்துக்கு முந்தைய பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் லோகேஷ் ராகுல் பவுண்டரி அடிக்க இந்தியா 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்தது.

பின்னர் 353 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து வருகிறது.

Similar News