செய்திகள் (Tamil News)
பாபர் ஆசம் இமாம் உல் ஹக்

வங்காள தேசத்திற்கு எதிராக 315 ரன்களே அடித்தது பாகிஸ்தான்: அரையிறுதி கனவு தகர்ந்தது

Published On 2019-07-05 13:37 GMT   |   Update On 2019-07-05 13:37 GMT
வங்காள தேசத்திற்கு எதிராக 315 ரன்களே அடித்துள்ளதால், உலகக்கோப்பைக்கான அரையிறுதி வாய்ப்பை இழந்தது பாகிஸ்தான்.
பாகிஸ்தான் - வங்காள தேசம் அணிகள் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 43-வது லீக் ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 400 ரன்களுக்கு மேல் அடித்தால் மட்டுமே, அரையிறுதிக்கான வாய்ப்பு கிடைக்கும் என்ற நெருக்கடியான சூழ்நிலையுடன் களம் இறங்கியது.

பகர் ஜமான், இமாம் உல் ஹக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பகர் ஜமான் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து இமாம் உல் ஹக் உடன் பாபர் ஆசம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் பாகிஸ்தான் 400 ரன்களை தாண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.



ஆனால் அணியின் ஸ்கோர் 180 ரன்னாக இருக்கும்போது பாபர் ஆசம் 96 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய இமாம் உல் ஹக் சதம் அடித்தார். ஆனால் அடுத்த பந்தில் ஹட்அவுட் மூலம் வெளியேறினார். இமாம் உல் ஹக் ஆட்டமிழக்கும்போது பாகிஸ்தான் 41.5 ஓவரில் 246 ரன்கள் சேர்த்திருந்தது.

அதன்பின் வந்த முகமது ஹபீஸ் 27 ரன்னிலும், ஹரிஸ் சோஹைல் 6 ரன்னிலும், சர்பராஸ் அகமது 2 ரன்னிலும் (ரிட்டையர்டு ஹர்ட்) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.



கடைசி கட்டத்தில் இமாத் வாசிம் 26 பந்தில் 43 ரன்கள் விளாச பாகிஸ்தான் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள்  அடித்துள்ளது. வங்காள தேச அணி சார்பில் முஷ்டாபிஜூர் ரஹ்மான் ஐந்து விக்கெட்டுக்களும், சாய்புதீன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 316 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் பேட்டிங் செய்து வருகிறது.

Similar News