செய்திகள் (Tamil News)
பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ்

அரைஇறுதிக்கு நுழைய முடியாதது துரதிர்ஷ்டமே- பாக். கேப்டன் சர்பிராஸ் புலம்பல்

Published On 2019-07-06 07:29 GMT   |   Update On 2019-07-06 07:29 GMT
உலக கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடியும் அரை இறுதிக்கு நுழைய முடியாமல் போனது துரதிர்ஷ்டமே என்று பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் கூறியுள்ளார்.

லண்டன்:

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் 5-வது வெற்றியை பெற்றது. ஆனாலும் இதனால் எந்த பலனும் இல்லை. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 315 ரன் குவித்தது.

தொடக்க வீரர் இமாம்- உல்-ஹக் சதம் அடித்தார். அவர் 100 ரன்னும், பாபர் ஆசம் 96 ரன்னும், இமாத் வாசிம் 43 ரன்னும் எடுத்தனர். முஷ்பிகுர் ரகுமான் 5 விக்கெட்டும், முகமது சைபுதீன் 3 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய வங்காளதேச அணி 44.1 ஓவர்களில் 221 ரன்னில் சுருண்டது. இதனால் பாகிஸ்தான் 94 ரன்னில் வெற்றி பெற்றது.

சகீப்-அல்-ஹசன் அதிக பட்சமாக 64 ரன்னும், லிட்டன் தாஸ், 32 ரன்னும் எடுத்தனர். வேகப்பந்து வீரர் ‌ஷகீன்ஷா அப்ரிடி 35 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார். சதாப்கான் 2 விக்கெட்டும், முகமது அமீர், வகாப் ரியாஸ் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பாகிஸ்தானின் இந்த வெற்றியால் எந்த பலனும் இல்லை. அந்த அணி மிகப் பெரிய ரன் வித்தியாசத்தில் வென்றிருக்க வேண்டும். அதிசயம் நிகழ்ந்தால்தான் அப்படி செய்திருக்க முடியம்.

6-வது வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி நியூசிலாந்தைவிட ரன் ரேட்டில் பின்தங்கி இருந்ததால் அரை இறுதி வாய்ப்பை இழந்தது. இரு அணிகளும் தலா 11 புள்ளிகளைப் பெற்றிருந்தது.

ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து 4-வது இடத்தைப் பிடித்து அரை இறுதிக்கு முன்னேறியது. பாகிஸ்தான் 5-வது இடத்துடன் போட்டியில் இருந்து வெளியேறியது.

பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு தகுதி பெறாதது குறித்து அந்த அணியின் கேப்டன் சர்பிராஸ் அகமது கூறியதாவது:-

உலக கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடியும் அரை இறுதிக்கு நுழைய முடியாமல் போனது துரதிர்ஷ்டமே. ஒரு ஆட்டம் எங்களை மாற்றி விட்டது. வெஸ்ட்இன்டீசுக்கு எதிராக மோசமாக ஆடியதால் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

எங்களது பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் ஆகிய 3 துறையும் சிறப்பாக இருந்தது. பேட்டிங்கில் இமாம்-உல்- ஹக், பாபர்ஆசம், ஹாரிஸ் சோகைல் ஆகியோரும் பந்து வீச்சில் அமீர், சதாப், வகாப், ‌ஷகீன் அப்ரிடி ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டனர். நான் பார்த்த சிறந்த பந்து வீச்சு இதுவாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News