செய்திகள் (Tamil News)
ஸ்டீவ் ரோட்ஸ்

லீக் சுற்றோடு வெளியேற்றம்: வங்காளதேச அணி பயிற்சியாளர் நீக்கம்

Published On 2019-07-09 08:33 GMT   |   Update On 2019-07-09 08:33 GMT
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றோடு வெளியேறியதால், தலைமை பயிற்சியாளரை நீக்கியது வங்காள தேச கிரிக்கெட் போர்டு.
இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் 10 அணிகள் பங்கேற்றன. இதில் வங்காளதேச அணி 9 போட்டிகளில் 3 வெற்றி, 5 தோல்வி பெற்றது. 1 ஆட்டம் முடிவு இல்லை. தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தியது. அந்த அணி 7 புள்ளிகளுடன் 8-வது இடத்தை பிடித்து போட்டி தொடரில் இருந்து வெளியேறியது.

இந்த நிலையில் உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டதால் வங்காளதேச அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீவ் ரோட்சை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிரடியாக நீக்கம் செய்தது.

இதுதொடர்பாக வங்காள தேச கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி நிஜாமுதீன் கூறும்போது, ‘‘தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ஸ்டீவ் ரோட்சை விலக்குவதாக ஒருமனதாக முடிவு செய்து இருக்கிறோம். இந்த முடிவு உடனடியாக அமலுக்கு வருகிறது’’ என்றார்.

உலகக்கோப்பையில் பங்கேற்ற வங்காளதேச அணி சொந்த நாட்டுக்கு திரும்பிய மறுநாளே பயிற்சியாளர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வங்காளதேச அணிக்கு தலைமை பயிற்சியாளராக ஸ்டீவ் ரோட்ஸ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நியமனம் செய்யப்பட்டார். அவரது பதவி காலம் அடுத்த ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலககோப்பை வரை உள்ளது. ஆனால் 50 ஓவர் உலககோப்பையில் ஸ்டீவ் ரோட்சின் பங்களிப்பு திருப்தி தராததால் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த மாதம் இறுதியில் வங்காளதேச அணி இலங்கைகு சுற்றுப் பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கு விரைவில் இடைக்கால பயிற்சியாளர் நியமிக்கப்படுவார் என்று நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

Similar News