செய்திகள்

ராசிபுரம் அருகே ஆண்கள் மட்டும் விடிய விடிய கொண்டாடிய கோவில் திருவிழா

Published On 2018-07-30 09:31 GMT   |   Update On 2018-07-30 09:31 GMT
ராசிபுரம் அருகே ஆண்கள் மட்டும் விடிய விடிய கொண்டாடிய கோவில் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோருக்கு இறைச்சியுடன் சமபந்தி விருந்து நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ளது மலையாம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு போதமலை மலையாள தெய்வம் என்று அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற பொங்களாயி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கட்டிடம், கோபுரம் எதுவும் இல்லை. ஆலமரத்து அடியில் அமைந்துள்ள பொங்களாயி அம்மன் மிகவும் பிரசித்தி பெற்றது.

இக்கோவில் திருவிழா ஆண்டுதோறும் ஆடி 18 பண்டிகையையொட்டி நடந்து வருகிறது. இந்த திருவிழாவில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு பொங்கல் வைத்து ஆடுகளை பலியிட்டு அம்மனை வழிபட்டுச் செல்வது வழக்கம். வழக்கம்போல் இந்த ஆண்டும் திருவிழா கடந்த வாரம் 20-ந் தேதி வெள்ளிக்கிழமை பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. திருவிழா நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு பொங்களாயி அம்மன், காளியம்மன், கருப்புசாமி உள்ளிட்ட 3 கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

முதலில் காளியம்மன் மற்றும் கருப்புசாமிக்கு பூஜை செய்யப்பட்டது. அதன் பிறகு பொங்களாயி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு நேற்று இரவு 11 மணியளவில் கோவில் நிர்வாகம் சார்பில் முதலில் பெண் ஆடு பலியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்று வதற்காக கொண்டுவந்திருந்த 154 ஆடுகள் பலியிடப்பட்டன. அதன்பின்னர் பலியிடப்பட்ட ஆடுகளின் இறைச்சியை விடிய விடிய பெரிய பெரிய பாத்திரங்களில் வைத்து சமைக்கும் பணி நடந்தது. மேலும் அரிசி சாப்பாடு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு வழங்குவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது.



அதைத்தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) அதிகாலை முதல் ஆயிரக்கணக்கானோருக்கு இறைச்சியுடன் சமபந்தி விருந்து வழங்கப்பட்டது. இந்த சம பந்தி விருந்து பபே முறையில் (பாக்கு மட்டை தட்டு) பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதற்காக கோவிலில் இருந்து 1 கி.மீ.தூரம் வரை பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சமபந்தி விருந்தை வாங்கி சாப்பிட்டனர். இன்று காலை 9 1/2 மணி வரை சமபந்தி விருந்து வழங்கப்பட்டது. இந்த சமபந்தி விருந்தில் ராசிபுரம், பட்டணம், வடுகம், புதுப்பட்டி, அய்யம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமின்றி பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.

இதனிடையே திருவிழாவின் போது வேண்டுதலை நிறைவேற்று வதற்காக பலியிடப்பட்ட ஆடுகளின் இறைச்சி மற்றும் சமபந்தி விருந்திற்கு வைக்கப்பட்ட உணவை வீடுகளுக்கு பக்தர்கள் கொண்டு செல்வதில்லை. ஆண்கள் மட்டுமே கொண்டாடும் இந்த திருவிழா மூலம் நோய் நொடி நீங்கி உடல் நலத்துடன் வாழவும், விவசாயம் செழித்து விளங்கவும், குழந்தை பாக்கியம் கிடைத்து, குடும்ப பிரச்சினை இன்றி வாழ முடிகிறது என்றும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கூறினர். ஆன்மீகம் என்றால் பெண்களின் ஈடுபாடு அதிகம் இருந்து வருகின்ற இந்த காலத்தில் ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் இந்த நூதன கோவில் திருவிழா தமிழக அளவில் தனி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

விழா ஏற்பாடுகளை கோவில் தர்மக்கர்த்தாக்கள் எஸ்.சுப்பிரமணியம், டி.ஆனந்த், எம்.சுப்பிரமணி மற்றும் விழாக்குழுவினர் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News