செய்திகள்
கன்னியாகுமரி கடற்கரையில் தர்ப்பணம் கொடுக்க திரண்ட பக்தர்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.

ஆடி அமாவாசை தர்ப்பணம் கொடுக்க குமரியில் குவிந்த கேரள பக்தர்கள்

Published On 2018-08-11 05:43 GMT   |   Update On 2018-08-11 05:43 GMT
ஆடி அமாவாசையான இன்று இந்துக்கள் நீர் நிலைகளில் புனித நீராடி முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்தனர்.
முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் இன்று அதிகாலை 4 மணி முதலே பக்தர்கள் திரண்டனர். அவர்கள் கடலில் புனித நீராடி கடற்கரையில் அமர்ந்திருந்த வேத விற்பன்னர்கள் மற்றும் புரோகிதர்கள் முன்பு அமர்ந்து தர்ப்பணம் கொடுத்தனர். வாழை இலையில் பச்சரிசி, எள், தர்ப்பைப்புல், தண்ணீர், பூக்கள் போன்றவற்றை வைத்து பூஜை செய்து பின்னர் அவற்றை தலையில் சுமந்து சென்று கடலில் கொண்டு போய் போட்டனர்.

பின்னர் மீண்டும் நீராடி விட்டு கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் மற்றும் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.

தர்ப்பணம் கொடுக்க லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் கன்னியாகுமரியில் எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே தென்பட்டது. பக்தர்கள் இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும் அதிகளவில் வந்திருந்ததால் கன்னியாகுமரி மற்றும் கொட்டாரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. போலீசார் ஆங்காங்கே நின்று போக்குவரத்தை சீர் செய்தனர்.

இதேபோல குழித்துறை வாவுபலிமைதானத்திலும் பக்தர்கள் திரண்டு தர்ப்பணம் கொடுத்தனர். குழித்துறையில் இன்று வழக்கத்தை விட கேரள பக்தர்களின் வருகை அதிக அளவில் இருந்தது.


குழித்துறை வாவு பலி மைதானத்தில் பலிகர்ம பூஜை செய்த பக்தர்களை படத்தில் காணலாம்.


தற்போது கேரளாவில் கனமழை பெய்து வருவதால் ஆறு மற்றும் நீர்நிலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆறுகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தர்ப்பணம் கொடுக்கக்கூட இடம் இல்லாத வகையில் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

கேரளாவில் அதிக மக்கள் குவிந்து தர்ப்பணம் கொடுக்கும் ஆலுவா சிவன் கோவில் வெள்ளத்தில் மிதக்கிறது. இதனால் அங்கு தர்ப்பணம் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கேரள பக்தர்கள் மாநில எல்லையில் உள்ள தமிழக பகுதியான குழித்துறைக்கு வந்து புனித நீராடி பலிகர்ம பூஜைகளை நிறைவேற்றினர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நீண்ட வரிசையில் காத்து இருந்து தர்ப்பணம் கொடுத்தனர்.

கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு தர்ப்பணம் கொடுக்கும் அந்த பகுதி மக்களும் இன்று குழித்துறையில் குவிந்து இருந்தனர்.

கன்னியாகுமரியிலும் கேரள பக்தர்களின் கூட்டத்தை அதிக அளவில் காண முடிந்தது.
Tags:    

Similar News