செய்திகள்

சொர்க்கவாசல் திறப்பு: திருப்பதியில் 2 லட்சம் பக்தர்கள் திரண்டனர்

Published On 2018-12-18 06:49 GMT   |   Update On 2018-12-18 06:49 GMT
வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி கோவிலில் நள்ளிரவு 1.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சாமி தரிசனம் செய்வதற்காக சுமார் 2 லட்சம் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நள்ளிரவு 12.05 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, தனுர் மாத பூஜைகள் செய்யப்பட்டது. நள்ளிரவு 1.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

முதலில் உற்சவர்களான ஸ்ரீதேவி-பூதேவி, சமேத மலையப்பசாமி சொர்க்கவாசலில் நுழைந்து, கோவிலில் உள்ள தங்க வாசலில் வைக்கப்பட்டார்.

இதையடுத்து நள்ளிரவு 1.30 மணியில் இருந்து அதிகாலை 3 மணிவரை வி.ஐ.பி. புரோட்டோக்கால் பக்தர்கள் வெங்கடாசலபதியை தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில் கண்டாமணி மண்டபம் அருகில் உள்ள சொர்க்கவாசலில் நுழைந்து, பிரதான உண்டியல் வழியாக வெளியே சென்றனர். பின்னர் அதிகாலை 5 மணியில் இருந்து இலவச தரிசன பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டனர்.

இன்று காலை தங்க தேரோட்டம் நடந்தது. தங்க தேரில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஏழுமலையான் எழுந்தருளி மாடவீதிகளில் பவனி வந்தார். சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதியில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

இலவச தரிசன பக்தர்கள் திருமலையில் உள்ள எம்.பி.சி. காட்டேஜ் விடுதி அருகில் 26-வது நம்பர் கேட்டில் நுழைந்து, வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக சென்று தரிசனம் செய்தனர். சொர்க்கவாசல் வழியாக சென்று வழிபட, ஏகாதசி மற்றும் துவாதசி நாட்களில் மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளதாக திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாளை (புதன்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு சொர்க்கவாசல் மூடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகளில் வரும் பக்தர்களுக்கான திவ்ய தரிசனமும் 20-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News