செய்திகள்

பழனி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2019-01-16 07:42 GMT   |   Update On 2019-01-16 07:42 GMT
பழனி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
முருகனின் மூன்றாம் படைவீடான பழனி திருத்தலத்தில் ஆண்டுதோறும் தைப்பூசத்திருவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வருடத் திற்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை யொட்டி பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் ராக்கால பூஜைக்கு பின் கிராமசாந்தி பூஜை நடைபெற்றது.

அதைதொடர்ந்து தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி சந்திப்பில் உள்ள அபரஞ்சி விநாயகர் கோவிலில் வாஸ்து சாந்தி பூஜையும், பெரிய நாயகி அம்மன் கோவில் முன்பு உள்ள தீப ஸ்தம்பம் அருகே புனித மண் எடுத்து சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது.

10நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் முதல் நாளன்று பெரியநாயகி அம்மன் கோவிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், மயூரையாகம் நடைபெற்று, கொடிப்படம் நான்கு ரத வீதிகளில் வலம் வருதல் நிகழ்ச்சியும், முத்துக்குமார சுவாமி மண்டபத்தில் முத்துக்குமார சுவாமி வள்ளி தெய்வனைக்கு 16 வகை அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்று கொடி படத்திற்கு சிறப்பு பூஜையும், நடைபெற்றது. காலை 9 மணிக்கு மேல் காலசந்தி பூஜையில் காப்பு கட்டும் நடைபெறுகிறது. அதன்பின்னர் முத்துக்குமாரசுவாமி வள்ளி தெய்வானையுடன் சப்பரத்தில் எழுந்தருளி கொடிப்படத்துடன் கொடிகட்டு மண்டபத்திற்கு எழுந்தருளினார்.

அதன்பின்னர் விநாயகர் பூஜை, கொடிபூஜை, வாத்திய பூஜை நடைபெற்றும் கொடிப்படத்திற்கு தீபாரதனையும் நடைபெற்ற பின்னர் கொடியேற்றம் நடைபெற்றது.

ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோ‌ஷம் எழுப்பி முருகனை வழிபட்டனர். விழாவில் வருகிற 20-ந் தேதி திருக்கல்யாணமும், 21-ந் தேதி தைப்பூச தேரோட்டமும் நடைபெறுகிறது. 24-ந் தேதி தெப்ப உற்சவத்துடன் தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது.

Tags:    

Similar News